சென்னை. பல்கலை. வங்கிக் கணக்கு முடக்கம்: அரசுக்கு வலுக்கும் கண்டனம்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியதைக் கண்டித்து அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியதைக் கண்டித்து அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு அலுவலகச் செயலாளர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் வருமானவரித் துறையால் முடக்கப்பட்டிருக்கின்றன. இச்செய்தி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான, சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற சி.வி.இராமன், சு.சந்திரசேகர், மாபெரும் கணித மேதையான ராமானுஜம், பெரும் மேதைகள் பலர், பேராளுமைகள் பலர் இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பயின்றவர்கள். இப்பல்கலைக்கழகம் ஒரு அரசுப் பல்கலைக்கழகம். வரலாற்றுப் பின்னணியில் கூறுவதாயின் இது மக்களின் பல்கலைக்கழகம். ‘நீண்ட பாரம்பரியம் கொண்ட இப்பல்கலைக்கழகம் இன்று இப்படி ஒரு நிலைக்கு ஏன் வந்தது.?’ என்பதே மக்களின் கேள்வியாகும்.
2019ஆம் ஆண்டு தணிக்கைத் துறை மூலம் தணிக்கைத் தடை எழுப்பப்பட்டதாக ஊடகங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதன் காரணமாக ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவும் தமிழக அரசும் படிப்படியாக நிதிப்பங்களிப்பினைக் குறைத்திருக்கின்றன. ஒருகட்டத்தில் அரசின் பங்களிப்பு 51 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்திருக்கிறது. இதனால் இப்பல்கலைக்கழகத்தினை பொதுப் பல்கலைக்கழகம் என்ற நிலையில் இருந்து கீழிறக்கி சுயநிதிப் பல்கலைக்கழகம் என்ற இடத்திற்குச் சட்டத்தின் பார்வையில் தள்ளியிருக்கிறது. இந்தச் சட்டச்சிக்கலால் சுயநிதிப் பல்கலைக்கழகம் போன்று வருமான வரி கட்ட வேண்டிய நிலைக்கு இப்பல்கலைக்கழகம் தள்ளப்பட்டிருக்கிறது. சிக்கல்கள் மென்மேலும் அதிகமாகி இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டிருக்கின்றன.
சுமையாகக் கருதும் அரசு
1986ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அப்போதைய ‘தேசியக் கல்விக்கொள்கை பெரும் ஆபத்துக்கள் நிறைந்தது என நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்ற பேராளுமைகள் எச்சரித்தது கல்வியாளர்கள் அனைவரும் அறிந்ததே. கல்வியை வணிக மயமாக்கும் மடைக் கதவுகள் அன்றுதான் திறக்கப்பட்டன. பொதுக்கல்வியை அளிக்கும் பொறுப்பில் இருந்து அரசு தன்னைப் படிப்படியாக விடுவித்துக்கொள்ளும் போக்கு தொடங்கியது.
அரசுப் பள்ளிகளையும் அரசுக் கல்லூரிகளையும் அரசுப் பல்கலைக்கழகங்களையும் அரசு சுமையாகக் கருதத் தொடங்கியது. பொதுக்கல்வி நிறுவனங்கள் நாசமாவதை ஒன்றும் தெரியாதது போல அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகம் இன்று இத்தகைய மிக மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட தணிக்கைத்தடையின் காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்குவதற்குத் தமிழக அரசிற்கு எவ்வளவு மணிநேரம் ஆகியிருக்கும்..? அல்லது ஒன்றிய அரசிற்கு எவ்வளவு மணிநேரம் ஆகியிருக்கும்? அவர்களிடம் ஆட்சிப்பணியில் அதிகாரிகள் பலர் இருக்கின்றனர். கல்வித்துறை செயலர்கள் இருக்கின்றனர். அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள், மக்கள் பணியாளர்கள் என்ற நினைவுடன்தான் இருக்கிறார்களா..?
இக்கட்டான நிலையில் மாணவர்கள்
இந்நிலைக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தை வீழ்ச்சியடையச் செய்த ஒன்றிய, மாநில அரசுகளை அகில இந்தியப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆய்வு மாணவர்கள், விடுதி மாணவர்கள் நிதியில்லாமல் இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிடியின் தமிழ்நாடு மாநிலக் கமிட்டி (AISEC) கோருகிறது. மேலும் தணிக்கைத் தடைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து குற்றவாளிகள் யாராயினும் அவர்களைத் தகுந்த துறை வழியாக அல்லது நீதிமன்றம் வழியாக நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோருகிறது. மேலும் இதன் கீழ் பல லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு இது போன்ற சூழல் மீண்டும் உருவாகாதவாறு விழிப்புடன் இருக்குமாறு மத்திய மாநில அரசுகளைக் கோருகிறது.
தேசிய கல்வி கொள்கை 2020-ன் விளைவாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தனியார் பல்கலைக்கழகமாகக் கருதி அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியதை ஒன்றிய அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும் தணிக்கையினால் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்த்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “தொகுப்பு நிதி” (Block Grant) யினை உடனடியாகத் தமிழ்நாடு அரசு வழங்கக் கோரியும் சக்திவாய்ந்த போராட்டத்தை நடத்த மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி மீது அக்கறை கொண்டோர் என அனைவரையும் அழைக்கிறோம்’’.
இவ்வாறு ஏ.ஐ.எஸ்.இ.சி. (AISEC) தெரிவித்துள்ளது.