National Means-cum-Merit Scholarship: தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அரசு அனுமதி
ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உள்ளாட்சி அமைப்புப் பள்ளிகளில் உள்ள நன்றாக படிக்கும் 9-aaம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை (NMMSS), 5 ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகைth திட்டத்தை (NMMSS) 15வது நிதி ஆணைய சுழற்சியில், 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-22 முதல் 2025-26ம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் திட்ட செலவு ரூ.1827 கோடி. இதை பெறுவதற்கான தகுதியில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரம்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்பதில் இருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் இத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் முறையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது மற்றும் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி கொள்வதைத் தடுத்து நிறுத்தி அவர்களை கல்வியில் அடுத்த நிலைக்கு தொடர ஊக்குவிப்பது ஆகும்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உள்ளாட்சி அமைப்புப் பள்ளிகளில் உள்ள நன்றாக படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12, 000 வழங்கப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம் இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேசியக் கல்வி உதவித்தொகை இணையளத்தில் இத்திட்டம் பற்றிய விவரம் உள்ளது. கல்வி உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதில் 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த தொடர்திட்டம் கடந்த 2008-09 ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 22.06 லட்சம் கல்வி உதவித் தொகை, ரூ.1783.03 கோடி மதிப்பில் 2020-21 வரை வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 14.76 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1827 கோடி மதிப்பில் கல்வித் உதவித் தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்புள் தெரிவிக்கப்பட்டது.
புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம்:
முன்னதாக, ‘புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம், வயது வந்தோருக்கான புதிய கல்வித் திட்டம் (New India Literacy Programme -Adult Eduation) 2022-27 -க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தில், கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம். இந்த 5 ஆண்டு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டத்தில் ஆண்டுக்கு 1 கோடி அளவில் 5 கோடி பேருக்கு ஆன்லைன் மூலம் தேசியத் தகவல் மையம், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில், மற்றும் திறந்தவெளிப் பள்ளி தேசிய மையம் ஆகியவற்றுடன் இணைந்து கல்வி கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.