“மனசே மனசே மனசில் பாரம்”... பாடலை கேட்டதும் கதறி அழுத மாணவர்கள் - நிறைவு நாள் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி
தருமபுரி அருகே தனியார் நர்சிங் கல்லூரி நிறைவு நாள் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுத மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள்.
தருமபுரி இலக்கியம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியின் ஐம்பெரும் விழா செந்தில் நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா, அன்னையர் தின விழா மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முடிந்து திரைப்படங்களில் கல்லூரி வாழ்க்கையில் பிரியும்போது வரும் பாடல்கள் ஒலிபரப்பு செய்தனா். இதில் ஏப்ரல் மாதம் படத்தில் வரும் “மனசே மனசே மனசில் பாரம்” என்ற கல்லூரி வாழ்க்கையை வெளிக்கொண்டு வரும் பாடல் ஒலிபரப்பியபோது, மேடையில் மற்றும் மேடைக்கு கீழ் இருந்த மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக் கொண்டு, கூட்டம் கூட்டமாக கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தங்கள் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தரையில் உருண்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.
இந்த மாணவர்களின் அழுகையை கண்ட கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அப்பொழுது ஒரு மாணவர் அதிகப்படியாக அழுது மயக்க நிலையை அடைந்தார். இதனை கண்ட சக மாணவர்கள் அவரை தட்டி எழுப்பி தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரம் அந்த மாணவர் மயக்க நிலையில் இருந்ததால், அரங்கத்தில் சிறிது நேரம் மாணவர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. இதனைக் கண்ட தனியார் கல்லூரி ஊழியர்களும், மாணவர்களோடு இணைந்து அழுதனர்.
இதையடுத்து அழுத மாணவர்களிடம் நாம் அனைவரும் ஒரே ஊரில் ஒரே இடத்தில் இருக்கிறோம் அடிக்கடி சந்தித்துக் கொள்ளலாம் என அனைவருக்கும் ஆறுதல் கூறி, ஆசுவாசப்படுத்தினர். இந்த தனியார் கல்லூரி பிரிவு உபசார விழாவில் மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுவதும், கீழே உருண்டு அழுவதும் காண்போரின் நெஞ்சை கலங்கடித்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளத்தில் வெளியாகி, பரவி வைரலாகியுள்ளது. மேலும் பலரும் இதுபோன்று நமக்கு பிரிவு உபசார விழா, கல்லூரியில் வைக்கவில்லையே என ஏக்கத்தோடு தங்கள் கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.