'பேசுவது இந்தி படிப்பது தமிழ்' - செங்கல் சூளையில் இருந்த பிள்ளைகள் கையில் தமிழ் புத்தகங்களை கொடுத்த அரசு அதிகாரிகள்
செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்த அரசு தலைமை ஆசிரியை.
!['பேசுவது இந்தி படிப்பது தமிழ்' - செங்கல் சூளையில் இருந்த பிள்ளைகள் கையில் தமிழ் புத்தகங்களை கொடுத்த அரசு அதிகாரிகள் Dharmapuri Govt School Headmaster Identified North Indian Laborers Children Working in brick kilns enrolled them in school TNN 'பேசுவது இந்தி படிப்பது தமிழ்' - செங்கல் சூளையில் இருந்த பிள்ளைகள் கையில் தமிழ் புத்தகங்களை கொடுத்த அரசு அதிகாரிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/08/dc2f45a2c6b9728df89c619ad1430c3e1723100297981113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பள்ளி செல்லாத வட மாநில தொழிலாளர்களின் 10 குழந்தைகள் உட்பட 20 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்காக குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணிகள் வீடு வீடாக நடக்கிறது. இந்த பணியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், கிராமப்புற சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைநிறுத்தல் குழந்தைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
தருமபுரி மாவட்ட பகுதியில் பள்ளி செல்லா இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உத்ராவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள குடியிருப்புகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. தர்மபுரி ஒன்றியம் பலா மரத்துக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள செங்கல் சூளையில் கடந்த சில நாட்களாக சில வட மாநில தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்கி வேலை செய்வதாகவும், அவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாகவும் மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளாவிடம் தெரிவித்துள்ளனர்.
வடமாநில பெற்றோர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்
இதனை அடுத்து தர்மபுரி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜன், ஒன்றிய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன் ஆகிய ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் அருண்குமார், முனியப்பன், ஆசிரியர்கள் ஆனந்த், இம்ரான் மற்றும் தலைமை ஆசிரியர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர்கள், பீகார் மாநிலம் கயா மற்றும் நபாடா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களது குழந்தைகள் இதுவரை எந்த பள்ளியிலும் சேர்க்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. அப்பொழுது ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்தால், ஆசிரியர்கள் இம்ரான் அவர்களுடன் இந்தி மொழியில் பேசி, தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்களை விளக்கக் கூறி, அவர்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு அழைத்துச் சென்று நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய அதிகாரிகள்
இதை அடுத்து ருத்ராட்ச் (6), கரீனா (6), ஸ்வேதா (6), ஹர்திக் குமார் (6), ரித்திக் (6) ஆகியோர் முதல் வகுப்பிலும், சோணம் (7) லத்திகா( 7) மற்றும் சஞ்சித் (7) ஆகியோர் இரண்டாம் வகுப்பிலும், ரோகினி( 8) ஸ்ருதி குமாரி (10) ஆகியோர் முறையே 3 மற்றும் ஐந்தாம் வகுப்பிலும் பலா மரத்துக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர் .
அந்தக் குழந்தைகளுக்கு அரசின் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், என்னும் எழுத்தும் கையேடுகள் மற்றும் புத்தகப்பை ஆகியவை உடனடியாக வழங்கப்பட்டது. இந்த மாணவர்களின் வருகையை தொடர்ந்து கண்காணித்து அவர்களது கல்வி அறிவை மேம்படுத்து தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்டறிந்துள்ளனர்
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் வட மாநிலத்தை சேர்ந்த 10 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் ஒன்றிய வாரியாக 10 குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் 100% மாணவர்கள் சேர்க்கை உறுதி செய்யும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)