CBSE: மாணவர்களிடம் அதிகரிக்கும் நீரிழிவு; அதிரடி உத்தரவு பிறப்பித்த சிபிஎஸ்இ
4 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் தினந்தோறும் 13 சதவீத அளவுக்கு இனிப்புகளை எடுத்துக் கொள்கின்றனர்.

பள்ளி மாணவர்களிடையே நீரிழிவு, உடல் பருமன், பல் பிரச்சினைகள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் சர்க்கரை பலகை வைக்குமாறு சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவுறுத்தலின்படி, ’’சர்க்கரையை கூடுதலாக உட்கொள்வது நீரிழிவை மட்டுமல்ல, உடல் பருமன், பல் பிரச்சினை மற்றும் பிற மெட்டபாலிக் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இது குழந்தைகளின் நீண்ட நேர உடல்நலன் மற்றும் கல்வி செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
யார் யார் எவ்வளவு இனிப்பு?
வழக்கமாக குழந்தைகள் 5 சதவீதம் அளவுக்கே இனிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் 4 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் தினந்தோறும் 13 சதவீத அளவுக்கு எடுத்துக் கொள்கின்றனர். 11 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு 15 சதவீத அளவுக்கு தினசரி கலோரி உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர்.
இனிப்பு நிறைந்த சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை அடக்கம். இது டைப் 2 வகை நீரிழிவு, உடல் பருமன், பல் பிரச்சினைகள் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்தும்’’ என்று சிபிஎஸ்இ வலியுறுத்தி உள்ளது.
பள்ளிகள் என்ன செய்ய வேண்டும்?
சர்க்கரை தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய பலகைகளை அமைக்க வேண்டும். அந்த பலகையில்,
• பரிந்துரைக்கப்பட்ட தினசரி சர்க்கரை உட்கொள்ளல்
• பொதுவாக உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரை இருப்பது
• அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஏற்படுத்தும் உடல்நல அபாயங்கள்
• சர்க்கரை பொருட்களுக்கு ஆரோக்கியமான மாற்றுகள்
• மாணவர்கள் கவனத்துடன் சாப்பிடும் பழக்கம் மற்றும் குறைக்கப்பட்ட சர்க்கரை உட்கொள்ளலின் நீண்டகால நன்மைகள் குறித்து கல்வி கற்பிக்க விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துதல் ஆகியவை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















