போதிய ஆசிரியர் இல்லாமை.. தரமற்ற ஆய்வுகள்.. தமிழக உயர்கல்வியின் நிலை கவலைக்கிடம்.. சிஏஜி அறிக்கையில் தகவல்!
தமிழ்நாட்டின் பழமையான கல்வி நிறுவனமான சென்னைப் பல்கலைக்கழகம் தவறான மேலாண்மையாலும், தமிழக அரசிடம் இருந்து போதிய நிதி பெற முடியாததாலும், கடுமையான நிதி பற்றாக்குறை இருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை எடுக்கப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கை தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறையில் இருக்கும் பிரச்னைகளை சுட்டிக் காட்டுகிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான துறைகளில் ஆய்வுகள் தரமற்றவையாகவும், ஆய்வுகளே வெளியாகாமலும் இருக்கின்றனர். மேலும், இந்த அறிக்கையில் ஆய்வுகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதியை சென்னைப் பல்கலைக்கழகம் ஊதியம் அளிப்பதற்கும், இதர செலவுகளுக்கும் பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையில் யுஜிசி பரிந்துரை செய்துள்ள 50 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கும் குறைவான தொகையே கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறுகிறது. `காலியாக இருக்கும் பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 2020 கணக்கீட்டின்படி, மாதத்திற்கு 15 ஆயிரம் சம்பளம் அளிக்கப்பட்டு 4084 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, கடந்த செப்டம்பர் 13 அன்று, தமிழக சட்டமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் கால தாமதம் செய்ததால், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கௌரவ விரிவுரையாளர்கள் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படாமல், ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசுக் கல்லூரிகளில் 10079 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், 4889 ஆசிரியர்களின் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும், சுமார் 51 சதவிகித இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதில் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்பியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2014 முதல் 2019 வரை, அரசுக் கல்லூரிகளில் புதிதாக 17 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு, ஆசிரியர்கள் இல்லாமலே சுமார் 1318 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பாடங்களில் போதிய வசதிகள் இல்லாததால், ஒப்புதல் பெறப்பட்டுள்ள எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. 2014 முதல் 2019 வரை, மேலும், 63 பாடப்பிரிவுகளில் 68 சதவிகித மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. இவற்றுள் 27 முதுநிலைப் பாடங்களில் ஒரு மாணவர் கூட சேரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பழமையான கல்வி நிறுவனமான சென்னைப் பல்கலைக்கழகம் தவறான மேலாண்மை காரணமாகவும், தமிழக அரசிடம் இருந்து போதிய நிதி பெற முடியாத காரணத்தாலும், கடுமையான நிதி பற்றாக்குறையில் இருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக, ஆய்வுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி ஊதியங்களுக்காகவும், இதர செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், மாணவர்களுக்குக் கல்வி எட்டும் தொலைவில் இருப்பது, குறைந்த கட்டணம் முதலானவற்றில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், மாணவர் ஆசிரியர் விகிதம், தேர்வு விடைத்தாள் திருத்தம், தரமற்ற ஆய்வுகள், நிர்வாக மேலாண்மையில் பிரச்னை முதலான விவகாரங்களில் பின்தங்கியுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
2014 முதல் 2019 வரை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சுமார் 1.48 லட்ச மாணவர்கள் தேர்வுத் தாள்களை மறு மதிப்பீட்டிற்கு அனுப்பியதாகவும், அவர்களுள் 50 சதவிகிதம் பேருக்கு மதிப்பெண்கள் மாற்றப்பட்டதாகவும் கூறும் இந்த அறிக்கை, தேர்வு மதிப்பீடு தரமற்றதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகங்களில் சில துறைகளைத் தவிர, பெரும்பாலான துறைகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், மேற்கொள்ளப்படும் ஆய்வுகளும் தரமற்று இருப்பதாகவும் சி.ஏ.ஜி அறிக்கை தெரிவிக்கிறது.