(Source: ECI/ABP News/ABP Majha)
Common Syllabus: பல்கலை., கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை எதிர்த்து போராட்டம்: கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (JAC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (JAC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் (தன்னாட்சி உட்பட) "ஒரே பாடத்திட்டம்" என்ற முறையை திரும்பப்பெற வேண்டும் என்ற JAC-ன் முதற்கட்ட போராட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதோடு மட்டுமல்லாமல், தரமற்றதாகவும் அமைந்துள்ளது.
உலகத்தில் கல்வியில் வளர்ந்து உயர்ந்த நாடுகளில் கூட, ஒரே பாடத்திட்டம் என்ற நடைமுறை இல்லை. மேலும் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் கூட ஒரே பாடத்திட்டம் என்பது எந்த அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்ற கொள்கை முடிவை எடுப்பதற்கு முன் அது தொடர்பான எந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு உயர் கல்வி மாமன்றமோ நடத்தியதாக தெரியவில்லை.
மேலும் இனி வரும் காலங்களில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை உயர் கல்வி மாமன்றமே பாடத்திட்டத்தை வகுக்குமா? அப்படியென்றால் 13 பல்கலைக்கழகங்களிலுள்ள 500 க்கும் மேற்பட்ட Boards of Studies எதற்கு? பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பறிப்பதாக அமையாதா? என்ற வாதங்களை நாம் எடுத்து வைத்தோம்.
அதற்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் துணைத்தலைவர் அவர்கள் "நாங்கள் அனுப்பியது வெறும் Model Syllabus தான்". பொதுப்பாடத்திட்டம் இல்லை. அந்த Model Syllabus-ஐ பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அந்தந்த பல்கலைக்கழகங்களின் Boards of Studies-ன் உரிமையாகும். நாங்கள் யாரையும் ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை” என கூறினார்.
அதற்கு JAC பொறுப்பாளர்கள் நீங்கள் எங்களிடம் கூறிய கருத்தை தமிழ்நாடு உயர் கல்வி மாமன்ற சுற்றறிக்கையாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அவர்களும் பேசிய விவரங்களின் முடிவின்படி சுற்றறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்கள். எனவே,
அவர்களுடன் பேசியது மற்றும் கூட்டாக இணைந்து எடுத்த முடிவுகளைக் கருத்தில் கொண்டு, 12.07.2023 அன்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன் நடத்திய கூட்டத்தின் அடிப்படையில் பத்திரிக்கை செய்தியையும் வெளியிட்டோம்.
ஆனால், 12.07.2023 அன்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், உண்மைக்கு புறம்பாக மறுநாளே தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், தமிழ்நாட்டில் "ஒரே பாடத்திட்டம்" அமல்படுத்தப்பட்டு விட்டதாகவும், கல்வியாளர்கள் வரவேற்பதாகவும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் மிகவும்
அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
எனவே, அதனை எவ்வாறு எதிர் கொள்வது, தமிழ்நாட்டின் உயர்கல்வியை தாழ விடாமல் எவ்வாறு பார்த்துக் கொள்வது, இதனை எவ்வாறு சந்திப்பது என்பதற்கான JAC-ன் இணையவழிப் பொதுக்குழுக் கூட்டம் 14.07.2023 மாலை 7 மணிக்கு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தினால் "மாதிரி பாடத்திட்டம்" என்ற முகமூடியை அணிந்து, அனைவர் மீதும் திணிக்கப்பட்ட "பொதுப்பாடத்திட்டம்" பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன் 12.07.2023 அன்று நடத்திய சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு முற்றிலும் மாறான பத்திரிக்கை செய்தியை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர்- செயலர் வெளியிட்டிருப்பது JAC பொறுப்பாளர்களுக்கு அதிர்ச்சியையும், மீண்டும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு உயர் கல்வி நிறுவனங்கள் மீது திணிக்கப்பட்ட "பொதுப் பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த ஜே.ஏ.சி பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில்,
17.07.2023 அன்று கோரிக்கை அட்டை அணிந்து தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் வாயில் முழக்கப் போராட்டமானது தமிழ்நாடு முழுமைக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பொதுப் பாடத்திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துதல்
21.07.2023 அன்று பல்கலைக்கழகங்கள் முன்பு மாலை 4:30 மணிக்கு வாயில் முழக்கப் போராட்டம்
25.07.2023 அன்று தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தில் "பயணப் படியைத் திருப்பி வழங்கும் போராட்டம்". (12.03.2023அன்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன் நடந்த பொதுப் பாடத்திட்டம்" குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜே. ஏ. சி. பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பயணப்படியைத்திருப்பி வழங்கும் போராட்டம்)
JAC-யின் அடுத்த கட்ட போராட்டங்களை ஜே.ஏ.சி.யின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்’’.
இவ்வாறு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துளது.