12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam 2024 Tamil Nadu: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், இன்று முதல் துணைத் தேர்வுக்கு, பள்ளிகள் மூலமாகவும் தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், இன்று முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
பள்ளி மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களும், தேர்வுக்கே வருகை புரியாத மாணவர்களும் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகு கல்லூரியில் சேரலாம். அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று இன்று 16.05.2024 ( வியாழக் கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் 01.06.2024 (சனிக் கிழமை ) வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச் 2024 மேல்நிலை முதலாம் ஆண்டு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இவர்கள், 16.05.2024 (வியாழக் கிழமை) முதல் 01.06.2024 (சனிக் கிழமை ) வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு அனுமதித் திட்டம்
இந்தத் தேதிகளில் விண்ணப்பிக்க முடியாத தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.1000 சிறப்பு அனுமதிக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் (Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளலாம்.
மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையத்தில் /
பள்ளியில் பணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு தேதிகள்
12ஆம் வகுப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் 24ஆம் தேதி தொடங்குகின்றன. மொழிப்பாடத்தோடு தொடங்கும் தேர்வில் ஜூன் 25ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த தேதிகளில், தேர்வுகள் நடைபெறுகின்றன. ஜூலை 1ஆம் தேதியோடு தேர்வு முடிவு பெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in