காலி பாட்டிலை திருப்பி கொடுத்தபோது வெடித்த மோதல்.. டாஸ்மாக் வாசலில் இளைஞர் கொடூர கொலை
மது அருந்தியதும் காலி பாட்டிலை டாஸ்மாக் கடையில் கொடுத்து ரூ.10 பணம் அருண்குமார் கேட்டுள்ளார். ஆனால் கடை மூடும் நேரம் என்பதால் பணியில் இருந்த கோவிந்தராஜ், மகன் கார்த்திக் ஆகியோர் பணம் தர மறுத்ததாக சொல்லப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்து பணம் வாங்குவது தொடர்புடைய சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படுகிறது. அதாவது முன்னதாக மதுபாட்டில்களுக்கு அடக்கவிலையில் இருந்து ரூ.10 கூடுதலாக பெறப்பட்டு, அந்த தொகை பாட்டிலை கொடுத்தவுடன் மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது. இந்த திட்டம் வரவேற்பை பெற்றாலும் இதில் பல சிக்கல்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது கொலையில் முடிவடைந்துள்ளது.
நடந்தது என்ன?
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் பகுதியை அடுத்துள்ள நஞ்சநாடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். 33 வயதான இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான வேளாண் நிறுவனத்தில் பணியாற்றின் வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட அருண்குமார் நேற்று வழக்கம்போல பணி முடிந்து நண்பர்களுடன் அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் பக்கத்தில் செயல்பட்ட அனுமதி பெறாத பாரில் மது அருந்தியுள்ளார்.
சானம்பட்டி சாலையில் உள்ள குறிஞ்சி நகர் பாரில் அருண்குமாருடன் தீபன்ராஜ், இன்பசேகர், மதன் மற்றும் பாரதிராஜா ஆகிய நண்பர்களும் சென்றுள்ளனர். மது அருந்தி முடித்த பிறகு காலி பாட்டிலை அங்கிருந்த டாஸ்மாக் கடையில் கொடுத்து ரூ.10 பணம் அருண்குமார் கேட்டுள்ளார். ஆனால் கடை மூடும் நேரம் என்பதால் பணியில் இருந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் பணம் தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் போதையில் இருந்த அருண்குமார் எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பிலும் வாக்குவாதமாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருண்குமாரை அவரது நண்பர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர். ஆனால் ஆத்திரம் தீராத கார்த்திக் பின்னால் தூரத்தி சென்று டாஸ்மாக் கடையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ஒரு பெரிய கல்லை எடுத்து அருண்குமார் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்தார்.
ஆனாலும் ஆத்திரம் தீராத கார்த்தில் தொடர்ச்சியாக அருண்குமாரை தாக்கியதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த கார்த்திக்கையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அருண்குமாரை கார்த்திக் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















