ஏற்காடு மலைப்பாதையில் சிறுமியின் உடல்.. சிறிது நேரத்தில் பதறிய போலீஸ்.. கடத்தி வந்து கொலையா?
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் அடையாளம் தெரியாத சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்காடு மலைப்பாதையில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில் செஞ்சியில் காணாமல் போன சிறுமியோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால் விசாரணையில் அந்த சிறுமி இல்லை என்பது தெரியவந்தது.
ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியாக சேலம் செல்லும் மலை பாதை வனப்பகுதியில் இன்று காலை ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் 30 அடி பள்ளத்தில் புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த சிறுமியின் உடலை மீட்டனர்.
சிறுமியின் உடல்
இந்த சிறுமி செஞ்சியில் மாயமான சிறுமியாக இருக்குமோ என்று கருதிய போலீசார் அங்க அடையாளங்களை பார்த்தனர். இது வேறு சிறுமி என தெரிய வந்தது. சிறுமி இறந்து கிடப்பதை அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி தேவராணி மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சிறுமி குறித்து விசாரித்தனர்.
கொலையா?
இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி யார்? எந்த ஊர்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் வேறு எங்காவது சிறுமியைக் கடத்தி வந்து கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருக்க ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் வீசிவிட்டுச் சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீஸ் விசாரணை
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு காவல்துறையினர் தகவல் கொடுக்கப்பட்டு சிறுமி யாராவது மாயமாக உள்ளார்களா என விசாரணை செய்ய உத்தரவிட்டு உள்ளனர். 15 வயது சிறுமியின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கிடத்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.
ட்ரெண்டிங் செய்திகள்























