தம்பதியை வெறிக்கொண்டு கத்தியால் குத்திய இளைஞருக்கு மாவுக்கட்டு...
மயிலாடுதுறையில் வயதான தம்பதியரை கத்தியால் குத்திய இளைஞர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று வழுக்கி விழுந்ததில் கை முறிந்துள்ளது.

மயிலாடுதுறையில் வயதான தம்பதியரை வெறிக்கொண்டு பல இடங்களில் கத்தியால் குத்திய பொறியியல் பட்டதாரி இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது தப்பிஓட முயற்சித்து வழுக்கி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தம்பதியர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுரா டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி 65 வயதான சேது மாதவன் மற்றும் அவரது மனைவி ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை 61வயதான நிர்மலா. இவர்களுக்கும் எதிர் வீட்டில் வசித்து வருபவர்கள் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ராஜேந்திரன் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை ஆனந்தி மற்றும் அவர்களது மகன் 24 வயதான பொறியியல் பட்டதாரியான பிரேம்.
கணவன் மனைவிக்கு கத்தி குத்து
இந்த எதிர் எதிர் வீடான இரண்டு குடும்பத்திற்கும் வாசலில் கோலம் போடுதல், வாகனங்களை நிறுத்துதல் என தொடர்ந்து சிறுசிறு பிரச்சினைகள் இருந்து வந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டில் வாசலில் கோலம் போட்ட நிர்மலா வந்துள்ளார். அப்போது மீண்டும் நிர்மலா விற்கும் பிரேமுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம் வீட்டில் காய்கறி வெட்டும் சிறிய கத்தியைக் கொண்டு 15- இடங்களில் நிர்மலாவை வெறியுடன் குத்தியுள்ளார்.
விரட்ட முயன்ற பொதுமக்கள்
நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து ஓடிவந்து அதனை தடுத்த நிர்மலாவின் கணவர் சேது மாதவனுக்கும் கத்தி குத்து விழுந்து உள்ளது. இவர்கள் இருவரது கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்து ஓடி வந்த பொதுமக்கள் கல் மற்றும் கட்டையால் பிரேமை விரட்டியுள்ளனர். அப்போது இளைஞர் பிரேமும் பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்க முயற்சித்துள்ளார். அப்போது பிரேமின் பெற்றோர்கள் மகனை வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
தஞ்சையில் சிகிச்சை
தொடர்ந்து படுகாயம் அடைந்த சேது மாதவன் மற்றும் அவரது மனைவி நிர்மலா இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு அனுமதித்தனர். தொடர்ந்து நிர்மலா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பிரேமை கைது செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் விசாரணை
விசாரணையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே சிறுசிறு பிரச்சனைகள் இருந்து வந்ததால் அடிக்கடி வாய் தகறாறு ஏற்பட்டு வந்த நிலையில் முன் கோப குணம் கொண்ட பிரேம் கோலம் போட வந்த நிர்மலாவிடம் வீண்தகராறு செய்து வாக்குவாதம் செய்தபோது ஆத்திரமடைந்த பிரேம் கத்தியால் குத்தியதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
வழுக்கி விழுந்த இளைஞர்
மேலும் பிரேம் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்த காவல்ஆய்வாளர் சிவக்குமார் விசாரணையில் மூதாட்டியை குத்திய கத்தியை எடுத்துதர அழைத்து சென்றபோது பிரேம் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது பிரேம் வழுக்கி விழுந்துள்ளார். அதில் பிரேமுக்கு வலது கையில் எழும்புமுறிவு ஏற்பட்டதை அடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டப்பட்டு, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

