வில்வித்தை வீரருக்கு மூக்கு அறுக்கப்பட்ட பரிதாபம் ; சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இருந்ததுதான் காரணமா?
ஆதித்யாவின் வாய் மற்றும் மூக்கினை அறுத்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆதித்யா தற்பொழுது ராஜுவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ளவிருந்த வில்வித்தை வீரர் ஆதித்யாவின் வாய் மற்றும் மூக்கினை மர்மநபர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான பொறியியல் பட்டதாரியான ஆதித்யா என்பவர், மாநில அளவில் பல்வேறு வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்று அவரின் திறமையினை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள அவர், தற்போது ஜூனியர் லெவல் போட்டியாளர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார். இதோடு ஆதித்யா சிறந்த பயிற்சியாளர் ஆவதற்கும் முயற்சி செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறக்கப்பட்டிருந்த நிலையில் பயிற்சி மையங்கள் எல்லாம் செயல்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் தமிழக அரசின் உத்தரவோடு பயிற்சி மையங்கள் செயல்படத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் வழக்கம் போல் ஐ.சி.எப் காலணியில் தயான் சந்த் வில்வித்தை பயிற்சி அகாடமியில் குழந்தைகளுக்குப் பயிற்சியினை வழங்கிவிட்டு, ஆதித்யா மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளார்.
அவ்வழியாக சென்ற போது, மர்ம நபர் ஒருவர் ஆதித்யாவினை மறிந்ததோடு ஒரு உதவி கேட்டார் எனக்கூறப்படுகிறது. அப்பொழுது தான் மர்மநபர் ஆதித்யா எதிர்பாராத நேரத்தில் தன் கையில் இருந்த கத்தியினைக்கொண்டு ஆதித்யாவின் வாய் மற்றும் மூக்கினை அறுத்துத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஆதித்யாவின் அலறல் சத்தத்தினைக்கேட்டு அருகில் இருந்த மக்கள் கற்களைக்கொண்டு வீசி மர்ம நபரினை அங்கிருந்து அடித்து துரத்தியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆதித்யாவினை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தபின்பு, இப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வில்வித்தை வீரர் தாக்கப்பட்டதற்கான காரணம் என்ன? யார் அந்த மர்ம நபர் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், ஆதித்யா அவ்வழியாக வருவார் என்று தெரிந்துதான், முகத்தில் கைக்குட்டையைக் கட்டியிருந்த மர்ம நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தினை நிறுத்தி விட்டு சுமார் அரை மணி நேரமாக அப்பகுதியினை நோட்டமிட்டுள்ளார் என சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் போலீசாரின் விசாரணையில், தேசிய அளவில் நடக்கும் வில்வித்தைப்போட்டியில் தமிழகத்தின் சார்பாக ஆதித்யா பங்கேற்க உள்ளார். இதற்காக பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக ஜூலை மாதம் முதல் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஆதித்யா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மர்ம நபர்கள் ஆதித்யாவினைத் தாக்கியுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும் ஆதித்யாவின் மொபைல் நெட்வொர்க்கினை பயன்படுத்தியும் போலீசார் யார் அந்த மர்ம நபர் என தீவிரமாக தேடி வருகின்றனர்.