பாலியல் வழக்கில் தந்தைக்கு சிறை; மனவேதனையில் மகன் தற்கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி
விழுப்புரம்: தந்தைக்கு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் மனவேதனையில் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அம்மன் குளத்து மேட்டை சேர்ந்தவர் அருள். இவரது மகன் நவீன் குமார் (வயது 17). இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கண் மருத்துவத்தில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவரது தந்தை அருள் மீது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி, கடந்த 2006-ம் ஆண்டு பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அதில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தார். அதில், கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி, தீர்ப்பு வழங்கியது.
அதன்பேரில், கடந்த வாரம் அருளை பெரியதச்சூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் மனமுடைந்த நவீன்குமார், வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பெரியதச்சூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் நவீன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060