தலையில் டப்பாவை கவிழ்த்து திருடும் நபர்..... வீடியோ வெளியாகி பரபரப்பு...!
செஞ்சியில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த மர்ம நபர் தலையில் பிளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்துக்கொண்டு நூதன முறையில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜேந்திர நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 65). இவர் செஞ்சி காந்தி கடை வீதியில் ஒருக்கட்டிடத்தில் மளிகை கடையும், அதன் மேல் தளத்தில் சூப்பர் மார்க்கெட்டும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றவர் நேற்று காலை வந்து கடையை திறந்தார். அப்போது மளிகை கடையில் இருந்த கல்லா பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு மொட்டை மாடியின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதன் மூலம் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
விழுப்புரம்: செஞ்சியில் தலையில் பிளாஸ்டிக் டப்பாவை கவிழ்துக்கொண்டு நூதன முறையில் கொள்ளை#villupuram pic.twitter.com/qY6aOOWUCq
— SivaRanjith (@Sivaranjithsiva) October 4, 2022
மளிகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர் பார்த்தார். அப்போது, கடையின் மேல் மாடி வழியாக ஒரு நபர், தலையில் பெரிய பாத்திரத்தை கவிழ்த்த படி மளிகை கடைக்குள் வந்து, பணத்தை திருடி சென்று இருப்பது பதிவாகி இருந்தது. சிசிடிவி கேமராக்கள் மூலம், தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக பாத்திரத்தை அந்த நபர் தலையில் கவிழ்த்தபடி வந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, ராஜகோபால் செஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு, சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் மூலம் விசாரணை நடத்தி, அந்த பலே திருடனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதேபோல், கடந்த வாரம் அதேபகுதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்தநிலையில், வியாபாரிகள் அனைவரும் வர்த்தக சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினியை நேரில் சந்தித்து, திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.