ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் பளார் என அறை... சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கன்னத்தில் அறைந்ததில் கீழே சுருண்டு விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள ஆயந்த்தூர் கிராமத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கன்னத்தில் அறைந்ததில் கீழே சுருண்டு விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு
விழுப்புரம் மாவட்டம், ஆயந்த்தூர் கிராமத்தை சார்ந்த சேகர் என்பவருக்கு அதே பகுதியை சார்ந்த முருகன் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். அதில் ரூ.20 ஆயிரத்தை சேகர் கொடுத்துவிட்ட நிலையில் நேற்று இரவு சேகர் ஆயந்த்தூரில் உள்ள டீ கடையில் தனது சகோதரர் விஜயகுமாருடன் டீ அருந்தி கொண்டு இருந்துள்ளார். அப்போது முருகன் சேகரிடம் சென்று வாங்கிய பணத்தின் மீதி தொகை 5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு செல் என்று டீ கடை முன்பாக வாக்குவாதம் செய்துள்ளார்.
கன்னத்தில் அறைந்ததில் ஒருவர் பலி
அப்போது சேகரின் தம்பி விஜயகுமார் பொது இடத்தில் வைத்து இப்படி அசிங்கபடுத்துவது சரியல்ல அண்ணன் தருவார் என்று கூறிய போது, உனக்கு நான் காசு கொடுக்கல், நீ ஏன்டா நடுவுல வர என்று வாக்குவாதம் செய்து சண்டையிட்டதில் ஆத்திரமடைந்த முருகன் ஆட்டோ டிரைவரான விஜயகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து கீழே தள்ளி உள்ளார்.
இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த விஜயகுமாரின் தலை, கீழே இருந்த கல் மீது பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கானை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் முருகனை கைது செய்தனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கன்னத்தில் அறைந்ததில் கீழே விழுந்து மற்றொரு ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.