கடைக்கு வரும் பெண்களை போட்டோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர் கைது
விழுப்புரம் : மயிலம் அருகே கடைக்கு வரும் பெண்களை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் கைது
விழுப்புரம்: மயிலம் அருகே கடைக்கு வரும் பெண்களை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தழுதாளி கிராமத்தை சேர்ந்தவர் அலாவுதீன். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது ஜுபேர் (வயது 21). இவர் தனது தந்தைக்கு உதவியாக அவ்வப்போது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த சமயத்தில் கடைக்கு வரும் இளம் பெண்களை, அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதனை ஆபாசமாக சித்தரித்துள்ளார்.
பின்னர் அந்த ஆபாச படங்களின் மீது ஆபாச வார்த்தைகளால் கவிதை எழுதி, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன்படி 15 க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஒருவர், அந்த பெண்ணின் கணவரிடம், உங்கள் மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறி, தனது செல்போனில் வந்த புகைப்படத்தை காண்பித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தழுதாளியில் மளிகை கடை வைத்துள்ள அலாவுதீன் மகன் முகமது ஜுபேர், கடைக்கு வரும் பெண்களை செல்போனில் படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஜுபேரை கைது செய்தனர். முகமது ஜுபேர் காவலர் பணிக்காக தேர்வு எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மளிகை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்