கிரிவலம் சென்ற பெண் மர்மான முறையில் உயிரிழப்பு - காதலனிடம் போலீஸ் விசாரணை
பயத்தில் பவித்ரா ஓடியபோது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக அவர் கூறினார்.
விழுப்புரம்: சென்னையில் இருந்து காதலனுடன் கிரிவலத்திற்கு சென்ற இளம் பெண் திண்டிவனம் அருகே சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - சென்னை சாலையில் கோனேரிக்குப்பம் கூட்ரோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண் உடல் அருகே நின்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரனையில், சென்னை மாதவரம், திருமலை நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் மகன் ரமேஷ்,21; சென்னையில் தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வரும், இவரும் சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி, துணிக்கடையில் வேலை செய்து வந்த கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த பவித்ரா, என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் சுங்கசாவடி அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து வந்த இருவர், ரமேஷிடம் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு பவித்ராவிடம் சில்மிஷம் செய்தனர். அதனை ரமேஷ் கண்டிக்கவே தகராறு ஏற்பட்டது. அப்போது, பயத்தில் பவித்ரா ஓடியபோது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார், பவித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்தில் விழுப்புரம் சாரக டிஐஜி திஷா மித்தல், எஸ்.பி., தீபக் சிவாச் ஆகியோர் விசாரணை நடத்தினர். தடயவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தடயங்களை சேகரித்தார். பின்னர் ஓங்கூர் டோல்கேட் முதல் ஒலக்கூர் கூட்ரோடு வரை உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவ நேரத்தில் அவ்வழியே சென்னையில் இருந்து வந்த கார் மீண்டும் ஒலக்கூர் கூட்ரோடு வழியாக சென்னை சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, சந்தேகத்திற்குரிய காரை கைப்பற்றி விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.