Crime: 40 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும் உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த பெண் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இவர்கள் மரக்காணம் அருகே உள்ள தைலமரதோப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பரும் அங்கு வந்தனர்.
அவர்கள், அந்த நபரை கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து விரட்டினர். இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதன்பின் தனியாக சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை மிரட்டி எழில்பரதனும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளதாகவும், இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும் உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவே, வாழ்வதை விட சாவதே மேல் என்று அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். ஆனால் 3 மகள்களின் கதி என்ன ஆகும் என நினைத்து அந்த முடிவை கைவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் பணம் தராததால், அவரை மிரட்டும் வகையில் பெண்ணின் ஆபாச வீடியோவை வாட்ஸ் அப்பில் எழில்பரதன் பதிவிட்டதாக தெரிகிறது. இதை அறிந்த அந்த பெண் மனவேதனை அடைந்தார். இந்தநிலையில் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.