காட்பாடி ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சாவை கடத்தியது யார் இவர்கள் எங்கிருந்து கடத்தி வருகின்றனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற பெயரில் கஞ்சா ஒழிக்கும் நடவடிக்கைகளில் தமிழக காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இதன்படி கஞ்சா புழக்கம் அதிகம் இருக்கும் இடங்கள், சந்தேகத்திற்குரிய பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹாதிய ரயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 2 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்ததடைந்தது. இந்த ரயிலில் காட்பாடி ரயில்வே ஆய்வாளர் சித்ரா தலைமையில் தலைமை காவலர் சண்முகசுந்தரம், முதல்நிலை காவலர் நரேந்திரகுமார், காவலர் தேவேந்திரன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், எஸ்-1 கோச்சில் உள்ள கழிவறை அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 2 பைகள் இருந்தது. காவல்துறையினர் அதனை சோதனை செய்தபோது, 24 பாக்கெட்டுகளில் 15 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சாவை கடத்தியது யார் இவர்கள் எங்கிருந்து கடத்தி வருகின்றனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வேலூர் மண்டல மத்திய கலால் பிரிவு ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில், துணை ஆய்வாளர் சங்கர் மற்றும் காவல்துறையினர் மதியம் 12.30 மணியளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்தை மடக்கி சோதனை நடத்தினர். அந்த பேருந்தில் ஒரு பயணி வைத்திருந்த பையை சந்தேகத்தின்பேரில் கலால் பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் கலால் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகில் பிர்லா மதாதரா பகுதியை சேர்ந்த ராம்பாபு (27) என்பது தெரியவந்தது. இவர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ராம்பாபுவை கைது செய்த காவல்துறையினர், மேலும் அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.