Crime : வடபழனி நிதி நிறுவன கொள்ளையில் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பா? குற்றவாளியின் ஷாக் வாக்குமூலம்!
சென்னை வடபழனியிலுள்ள நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
சமீப காலங்களாக சென்னையில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை அரும்பாக்கத்திலுள்ள ஃபேட் வங்கியில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. அந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் தற்போது சென்னையில் மேலும் ஒரு திருட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வடபழனியிலுள்ள நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரியாஸ்(22) என்ற நபரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன்படி அவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அத்துடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த 7 பேரில் 3 பேர் கல்லூரி மாணவர்கள் மற்ற 4 பேர் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் அந்த நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளதால் அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார்.
அப்போது அங்கு அடுக்கடுக்காக பணம் பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளதை பார்த்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். அவர்கள் இந்தப் பணத்தை கொள்ளை அடித்து போதை,மது என்று உல்லாசமாக இருக்க திட்டுமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக கடந்த ஒரு வாரமாக அந்த நிதி நிறுவனத்தை நோட்டம் விட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.
நடந்தது என்ன?
சென்னையின் வடபழனியின் மன்னார் முதலி தெருவில் ஓசோன் கேபிட்டல் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. இதை சரவணன் என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு நபர்களுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக அந்த அலுவலகத்தில் பண புழக்கம் அதிகமாக இருந்துள்ளது.
8 பேர் கொண்ட மர்ம கும்பல்:
இதை சில மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இந்த நிதி நிறுவனத்தில் பணியாளர்கள் வழக்கம் போல் பணியில் இருந்து வந்தனர். அந்த சமயத்தில் திடீரென 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று முகமூடி அணிந்துவாறு அலுவலகத்திற்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அங்கு இருந்த ஊழியர்களாக தீபக் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகிய இருவரையும் கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. அத்துடன் அவர்களை கட்டி போட்டுவிட்டு பணத்தை கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தீபக் மற்றும் சஞ்சீவ் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்றியுள்ளனர். வடபழனி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். மேலும் அந்தப் பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் பார்த்துள்ளர். அதன்பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் இக்பால் என்ற நபர் மட்டும் சிக்கியுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஒரு வாரத்திற்குள் இரண்டு பெரிய கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்