Crime: காதலனும் புருஷன் வீட்டுலையே தங்கணும்; போலீசிடம் அடம் பிடித்த மனைவி; கணவரின் அதிரடி முடிவு!
காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் அந்த பெண்ணை மின்கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கணவன்-மனைவி இடையிலான சண்டையின்போது விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. இது அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண், பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பெண் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சமாதானப்படுத்தி கீழே இறக்கிவிட்ட காவல்துறையினர் கணவன், மனைவி, காதலன் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
என்ன நடந்தது..?
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிப்ரைச் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ஜங்கல் சத்ரதாரி என்ற இடத்தில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருடன் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, தனது மனைவியின் உறவு அறிந்துகொண்ட அவரது கணவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கணவன் இது வேண்டாம் என்று பலமுறை பொறுமையாக கூறியும், அந்த பெண் ஏற்று கொள்ளாமல் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தலைக்கு மேல் தண்ணீர் வருகிறது என்று உணர்ந்துகொண்ட கணவர், இதுக்கு மேல் சும்மா விடக்கூடாது என்று எண்ணி காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், திடீரென வெளியே வந்த பெண், சாலையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி, கம்பியை பிடித்துக்கொண்டு நின்றார். பெண்ணின் இந்த செயலை பார்த்து காவல்துறையினரும், அருகில் இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மின்சாரம் தடை செய்யப்பட்டதால் நல்லவேளையாக பெரிய விபத்து ஏதும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், அந்த பெண் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுக்கவே, மின் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் அந்த பெண்ணை மின்கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர். பெண் கான்ஸ்டபிளுடன் அவரும் அவரது கணவரும் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
தொடர்ச்சியாக அந்த பெண், தனது காதலனுடன் தன்னை தனது வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். அதற்கு அந்த கணவன் எனக்கு என் குழந்தைகள்தான் முக்கியம். அவர்கள் இருவரும் என் வீட்டிற்கு வர கூடாது என தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் தொடர்ந்து, கணவர் சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த பெண் மிரட்டியுள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயற்சி:
ஒரு மாதத்திற்கு முன்பும் அந்த பெண் பிஆர்டி மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் காப்பாற்றப்பட்டார். இதற்கு முன்பும் ரயில் தண்டவாளத்தில் படுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் போலீசில் அளித்த புகாரில், மனைவி தற்கொலைக்கு முயன்றால் அதற்கு தான் பொறுப்பேற்க மாட்டேன் என தெளிவாக எழுதி கொடுத்துள்ளார். தற்போது அந்த பெண்ணின் இந்த செயல் உத்தரபிரதேசம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மின்வாரிய இளநிலை பொறியாளர் அமித்குமார் யாதவ் போலீசில் புகார் அளித்துள்ளார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் மின்வாரிய அதிகாரிகள் பொறுப்பேற்க மாட்டார்கள் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.