கள்ளச்சாராயத்தை பிராந்தியாக மாற்றும் ஆராய்ச்சி; 4 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கள்ளச்சாராயத்தை பிராந்தியாக மாற்றி விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலையால் அதிக உயரிழப்பு ஏற்பட்டது. அதை தடுக்க, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி முதல் தளர்வுகள் உடன் இரண்டு வாரங்களுக்கு தமிழக முதல்வரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.
இருப்பினும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்து உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்சமயம் அதிக அளவில் மது பாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் விற்பனை அதிகரித்து உள்ளதால்
காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு சாராயம் விற்பனை செய்பவர்கள் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசி அடுத்த இரும்புலி கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டில் எரிசாராயத்தில் போலி டாஸ்மாக் முத்திரை பயன்படுத்தி மது பாட்டில்கள் தயாரிப்பதாக தெள்ளார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பம்பு செட் கட்டிடத்தில் 4 பேரும் எரி சாராயத்தில் பல்வேறு ரசாயனங்கள் கலந்து போலி டாஸ்மாக் முத்திரையுடன் மதுபாட்டில்கள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து போலி மதுபாட்டில்கள் தயாரித்த திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (34) இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (35) , சிலம்பரசன் (28) ,இளவரசன் (26) ஆகிய இளைஞர் 4 பேரை டிஎஸ்பி தங்க ராமன் தலைமையில் தெள்ளார் காவலர்கள் பாண்டியன், சந்திரகுமார், போற்றிபுகழேந்தி, மற்றும் சிறப்பு படை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
அதன்பின்னர் 4 இளைஞர்களை கைது செய்து போலி மது பாட்டில் தயாரிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் 138 போலி மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து , தெள்ளார் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலி மதுபாட்டில் தயாரிக்க மூலகாரணமாக இருந்த திண்டிவனம் சங்கரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சமீபமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை சாதகமாக்கி போலி மதுபானங்கள் விற்கப்படுவதும், வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டும் , இச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை .தொடரும் இச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.