மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது!
மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த சில தினங்களாக சோர்வடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் அவரை அவரது தந்தை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் 5 மாதம் கர்ப்பம் என தெரியவந்தது.
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்ணிற்கு மனநலம் பாதிப்பு இருந்துள்ளது. இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை மற்றும் அண்ணன், தங்கை, தம்பிஆகியோருடன் அந்த பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த சில தினங்களாக சோர்வடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் அவரை அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் தந்தை, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,
இளம்பெண் தனது உறவினர்களுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஆடு மேய்க்கச் சென்ற போது
திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் (60), என்பவர் இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. முதியவரின் அந்தசெயலால் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கருத்தரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் பரசுராமன் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் இச்சம்பவம் தொடர்பாக ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‛‛பொதுவாகவே கடந்த 5 ஆண்டு வருடங்களாகவே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. இதிலும் குறிப்பாகச் சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து இருக்கிறது. தேசிய குற்றம் ஆவணங்கள் கூட இதைத் தான் காட்டுகிறது. இந்த பெண்கள் மீதான வன்கொடுமைகள் பார்வையற்றவர்கள், ஊனமுற்றோர்கள் மற்றும் வாய்பேச முடியாத, செவித்திறன் பாதித்த பெண்கள் மீது குறிவைத்து தாக்க கூடிய பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
காரணம் என்னவென்றால் இவர்களுக்கு ஒரு தைரியம் . பாதிக்கப்பட்டவர்கள் தங்களைக் காட்டிக் கொடுக்க முடியாது என்று குற்றவாளிகள் நினைப்பது தான். இது தான் இந்த வன்முறைகள் அதிகரிக்க காரணம்.
இது சம்பந்தமாக இதற்கு முன்பாக இருந்த டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தோம். இது மாதிரியான மாற்றுத்திறனாளி பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டால் அவர்களைக் காவல் நிலையத்திற்குக் கூட அழைத்து வரக்கூடாது. விசாரணைக்காக செல்லக்கூடிய காவல்துறையினரும் காவல் உடையில் செல்லக்கூடாது. இதுபோன்ற விதிமுறைகள் உள்ளது ஆனால் காவல்துறையினர் இது வரை அவற்றை பின்பற்றவில்லை. இதனுடைய வெளிப்பாடு தான் திருவண்ணாமலையில் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கூட துவக்கத்தில் போலீசார் கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளனர். ‛வயதானவருக்கு என்ன தண்டனை வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள்; உங்களுக்கு வேண்டுமென்றால் அவர்களிடம் இருந்து ஏதாவது வாங்கித் தருகிறோம் அல்லது அந்த வயதானவருக்குத் திருமணம் செய்து வைத்து விடுங்கள்,’ என்றெல்லாம் போலீசார் பேசியுள்ளனர்.
அதன் பிறகு தான் ஊனமுற்றோர் சங்கத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டது. அதன் பிறகு தான் கைது நடவடிக்கை நடந்தது,’’ என்றார்.
பெண்ணிற்கு உரிய இழப்பீடும் ,மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி குற்றவாளிக்குக் கடுமையான தண்டனையை வாங்கித் தருமாறு காவல் துறையினரிடம் ஊனமுற்றோர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.