கடத்தலில் ஈடுபட்ட திருச்சி சப் இன்ஸ்பெக்டர் கைது; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறை
விழுப்புரம்: யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை சம்பவத்தில் திருச்சி ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் அதிரடி கைது.
யானை தந்தங்களாலான பொம்மைகள்
யானை தந்தங்களினால் செய்யப்பட்ட பொம்மைகளை ஒரு கும்பல் காரில் கடத்திக்கொண்டு வந்து விழுப்புரம் நகரில் வைத்து விற்பனை செய்ய இருப்பதாக கடந்த மாதம் 13-ந் தேதியன்று விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று யானை தந்தங்களால் செய்யப்பட்ட 4 பொம்மைகளை விற்பனை செய்ய முயன்றதாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி ஈஸ்வரி (வயது 50), கருப்புசாமி (24), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தேவராஜன்பேட்டையை சேர்ந்த முகமது ஜியாவுதீன் (50), புதுக்கோட்டை அறந்தாங்கி எல்.ஆர்.புரத்தை சேர்ந்த ஜஸ்டிஸ் (46), திருச்சி பேட்டைவாய்தலை கார்த்திகேயன் (49), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளிவாளிபாளையம் பாலமுருகன் (43), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சிவாலயம் தோப்பு தெருவை சேர்ந்த ராஜா (38), தஞ்சாவூர் திருவையார் பிரபாகரன் (36), பாபநாசம் செட்டித்தெரு சுப்பிரமணியன் (37), தஞ்சாவூர் சீனிவாசபுரம் பைசல் (50), பாபநாசம் ருவந்தகுடி ராஜ்குமார் (56), சேலம் அதிகாரிப்பட்டி பார்த்தசாரதி (42) ஆகிய 12 பேரை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
யானை தந்தங்களினால் ஆன பொம்மைகள் பறிமுதல்
கைதான அவர்களிடமிருந்து 6½ கிலோ எடையுள்ள யானை தந்தங்களினால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் மற்றும் ஒரு கழுத்து மாலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த 4 யானை பொம்மைகளும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் பகுதியில் கைவினைப்பொருட்களாக தயார் செய்யப்பட்ட மிகவும் பழமைவாய்ந்தவை ஆகும். இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைதானவர்களில் முக்கிய நபர்களான ஈஸ்வரி, ஜியாவுதீன், ஜஸ்டிஸ் ஆகிய 3 பேரை கடந்த மாதம் 29-ந் தேதியன்று காவலில் எடுத்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களிடம் யானை தந்தங்களினால் செய்யப்பட்ட பொம்மைகள் உங்களுக்கு யார் மூலம் எப்படி கிடைத்தது? இந்த கடத்தல் மற்றும் விற்பனை சம்பவத்தில் எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள், இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று தீவிரமாக விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது செல்போன் அழைப்புகள் விவரத்தையும் ஆய்வு செய்தனர்.
திருச்சி காவல் உதவி ஆய்வாளருக்கு தொடர்பு
விசாரணையில், யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை சம்பவத்தில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மணிவண்ணனுக்கு (50) தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர், யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொம்மைகளை அவரது உறவினர் ஒருவரிடம் இருந்து பெற்று ஈஸ்வரி, ஜியாவுதீன் உள்ளிட்டவர்கள் மூலமாக சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். இந்த தகவலை ஈஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இந்த தகவல் பற்றி விழுப்புரம் வனத்துறை அதிகாரிகள், திருச்சி மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.
உதவி ஆய்வாளருக்கு சம்மன்
மேலும் இவ்வழக்கில் 13-வது குற்றவாளியாக காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணனை, வனத்துறை அதிகாரிகள், முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தனர். தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு திருச்சி ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணனுக்கு விழுப்புரம் வனத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், நேற்று முன்தினம் விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான வனத்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை சம்பவத்தில் உதவி ஆய்வாளருக்கு மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதிரடி கைது நடவடிக்கை
இதனை தொடர்ந்து, மணிவண்ணனை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை சம்பவத்தில் திருச்சியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு?
யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை சம்பவத்தில் திருச்சியை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது உறவினரிடம் இருந்து யானை பொம்மைகளை சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் பெற்றிருப்பது தெரியவந்தது. அவரது உறவினருக்கு அந்த யானை பொம்மைகள் எப்படி கிடைத்தது, யார் கொடுத்தனர் என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ள வனத்துறையினர், அவரையும் கைது செய்ய உள்ளனர். சப்-இன்ஸ்பெக்டரின் உறவினர் கைது செய்யப்பட்ட பிறகே அவருக்கு அந்த பொம்மைகள் எப்படி கிடைத்தது என்ற விவரம் தெரியவரும். இப்படி இந்த யானை பொம்மைகள் கடத்தல், விற்பனை சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பட்டியல் சங்கிலித்தொடர் போல நீண்டுகொண்டே செல்ல வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு உள்ளது என வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.