பிரிந்து சென்ற கள்ளக்காதலி; மனைவியை கூலிப்படை ஏவி கொன்ற கணவர் - பெரம்பலூரில் அதிர்ச்சி
ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கூலிப்படையை வைத்து கொலை செய்த அதிர்ச்சியான தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
![பிரிந்து சென்ற கள்ளக்காதலி; மனைவியை கூலிப்படை ஏவி கொன்ற கணவர் - பெரம்பலூரில் அதிர்ச்சி Trichy crime news Husband arrested for murdering his wife who was an obstacle to adultery TNN பிரிந்து சென்ற கள்ளக்காதலி; மனைவியை கூலிப்படை ஏவி கொன்ற கணவர் - பெரம்பலூரில் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/47cf5d90f3c96c791588d1c1b9d949921698226841153184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33). இவருக்கும், இவருடைய மாமா மகளான ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்த பிரவீணாவுக்கும் (24) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சர்வேஸ்வரன் (5), யோகித் (3) என 2 மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். பிரவீணா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் சர்வேஸ்வரன், யோகித் ஆகியோர் சிறுவயலூரில் உள்ள பிரவீணாவின் பெற்றோர் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 22-ந் தேதி ராஜ்குமார் இரவு பணிக்கு புறப்பட்டார். அப்போது பிரவீணாவை, அதே பகுதியில் தனது சித்தப்பா நமச்சிவாயம் வீட்டில் வசிக்கும் அக்காள் கீர்த்தனா வீட்டில் விட்டுச்செல்வதாக கூறி, அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். வழியில் எளம்பலூரில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலையில் சென்றபோது அவர்களை ஒரு கும்பல் திடீரென வழிமறித்து, சோளக்காட்டில் வைத்து அரிவாளால் வெட்டியது. இதில் பிரவீணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராஜ்குமாருக்கு கையில் வெட்டு விழுந்ததில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, மருத்துவமனையில் இருந்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீணாவின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சென்ற நாய், ராஜ்குமாரின் சித்தப்பா நமச்சிவாயம் வீட்டிற்கு ஓடியது பின்னர் அங்கிருந்து சம்பவ இடத்திற்கு மீண்டும் ஓடி வந்தது. நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. முதலில் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்து பிரவீணா அணிந்திருந்த நகைகள் இருக்கிறதா? என்று பார்வையிட்டனர். ஆனால் நகைகள் அனைத்தும் இருந்தன. இதையடுத்து பிரவீணாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே ராஜ்குமாருக்கும், பிரவீணாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராஜ்குமாரிடம் விசாரணையை தொடங்கினர். அப்போது ராஜ்குமார் பிரவீணாவை கூலிப்படையை வைத்து கொலை செய்த அதிர்ச்சியான தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
மேலும், போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க, தனக்கும் காயம் ஏற்படுத்திவிட்டு செல்லுமாறு கூலிப்படையினரிடம் கூறியுள்ளார். அதன்படி ராஜ்குமாரின் வலது கையில் அரிவாளால் வெட்டிவிட்டு கூலிப்படையினர் தப்பிச்சென்றனர். இதையடுத்து ராஜ்குமார் தனது சித்தப்பா வீட்டிற்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் மோட்டார் சைக்கிளில் பிரவீணாவை அழைத்து வந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து தன்னையும், பிரவீணாவையும் வெட்டியதாகவும், அவர்களிடம் இருந்து தான் தப்பி ஓடி வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தபோது ராஜ்குமார் மயங்கி கீழே விழுந்தாகவும், இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கபட்ட தகவல்..
ராஜ்குமாருக்கும், பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனை பிரவீணா கண்டித்துள்ளார். மேலும் அந்த பெண்ணும், ராஜ்குமாரும் ஏற்கனவே 2 முறை வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளனர். இதனால் ராஜ்குமாருக்கும், பிரவீணாவிற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த பெண் வேறொருவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. கள்ளக்காதலி தன்னை விட்டு பிரிந்து செல்ல பிரவீணா தான் காரணம் என்று நினைத்த ராஜ்குமார், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி கூலிப்படையை வைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். மேலும் இரவு பணிக்கு செல்வதற்கு முன்பு பிரவீணாவை, தனது சித்தப்பா வீட்டில் வசிக்கும் அக்காள் வீட்டிற்கு அழைத்து செல்லும்போது கொலை சம்பவத்தை அரங்கேற்ற ராஜ்குமார் திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று இரவு கூலிப்படை மூலம் பிரவீணாவை ராஜ்குமார் வெட்டிக்கொலை செய்தார் என தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)