காதலிக்க மறுத்ததால் பெண்ணை பாலியல் தொழிலாளியாக சித்தரித்த இளைஞர் கைது...!
கிருஷ்ணகிரி அருகே குடும்ப பெண்ணை ஆன்லைனில் பாலியல் தொழிலாளியாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் வயது (28) செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம் பெண்ணுக்கு செல்போன் அழைப்பு விடுத்து பேசியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் அடிக்கடி பேசத் தொடங்கிய நிலையில் மஞ்சுநாதன், தன்னை சகோதரனாக நினைத்து பேசுமாறு கூறியுள்ளார்.
நாளடைவில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக மஞ்சுநாதன், அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று கடந்த மார்ச் மாதம் செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். செல்போனை பெற்ற அந்த பெண், அவருடைய அடையாள அட்டையை பயன்படுத்தி புதிய செல் எண் பெற்றுள்ளார், அதன் மூலம் மேற்படி ஆண்ட்ராய்டு செல்போனில் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சகோதரன் போல் பேசி வந்த மஞ்சுநாதன், திடீரென அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார், இனிமேல் நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறியதால், ஆத்திரமடைந்த மஞ்சுநாதன் கடந்த ஏப்ரல் மாதத்தில், தான் வாங்கிக் கொடுத்த செல்போனை அந்தப் பெண்ணிடம் திரும்பத் தருமாறு கூறியுள்ளார். இதனால் தான் பயன்படுத்தி வந்த சிம்கார்டு மற்றும் அதிலிருந்த தகவல்களை அழிக்காமல் செல்போனை அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டார் அந்த பெண்.
இதனை திரும்ப பெற்றுச் சென்ற மஞ்சுநாதன், சில நாட்களில் அந்த செல்போன் மூலம், அந்தப் பெண்ணின் முகநூலில் இருந்து, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து, அந்தப் பெண்ணே ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக மஞ்சுநாதன் சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ளார். பாலியல் தொழில் அதே போன்று அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல் வாட்ஸ் ஆப்பிலும் அனுப்பி பொய்யான தகவலை பரபிவந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு எதிரியை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இளைஞர் அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி மஞ்சுநாதனை நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர்.