மின் கம்பத்தில் ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி கீழே விழும் அதிர்ச்சி வீடியோ - திருவண்ணாமலையில் சோகம்
திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் பழுது நீக்க மின் கம்பத்தில் ஏறிய ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி கீழே விழும் சிசிடிவி காட்சி சிகிச்சை பலனின்றி பரிதாப பலியானார்.
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் முனியப்பன் வயது (27). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியின் அடிப்படையில் தற்காலிக மின்ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த 6-ந் தேதி திருவண்ணாமலை நகர் பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மின்இணைப்பு பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையினர் பழுதை சரி செய்ய மின்சார துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வயர்மேன் குமார் மற்றும் தற்காலிக பணியாளர் முனியப்பன் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.
திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் பழுது நீக்க மின் கம்பத்தில் ஏறிய ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி கீழே விழும் சிசிடிவி காட்சி சிகிச்சை பலனின்றி பரிதாப பலி @abpnadu @SRajaJourno pic.twitter.com/Blgmv8NuWp
— Vinoth (@Vinoth05503970) February 10, 2023
அதனைத் தொடர்ந்து முனியப்பன் மின்கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் இருந்து முனியப்பன் கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த முனியப்பனை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் போில் திருவண்ணாமலை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முனியப்பன் மின்கம்பத்தில் ஏறி மின்இணைப்பு பழுதை சரி செய்யும் போது தனியார் மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் ஒயரில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து முனியப்பன் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முனியப்பனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மின்சாரம் தாக்கி முனியப்பன் கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.