Crime: வனத்துறை அதிகாரி மீது தாக்குதல் - செங்கத்தில் பீகார் வாலிபர் கைது
செங்கம் அருகே வனப்பகுதியில் ரோந்து ஈடுபட்ட வனத்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படி கத்தியுடன் நடமாடிய பீகார் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழைத்தூர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் மான்களை வேட்டையாடுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் வனக்காப்பாளர் பொன்னுரங்கம் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வனப்பகுதியில் தாடியுடன் கையில் ஒரு பையை வைத்துக்கொண்டு சுற்றி திரிந்துள்ளார் ஒரு வாலிபர். இதனைக் கண்ட வனக்காப்பாளர் பொன்னுரங்கம் உடனடியாக அந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளார். அதற்கு அந்த வாலிபர் பதில் ஏதும் சொல்லாமல் திடீரென அங்கிருந்த கல்லை எடுத்து வனக்காப்பாளர் பொன்னுரங்கம் தலையின் மீது தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த வனக்காப்பாளர் செங்கம் வன அலுவலர் ராமநாதனுக்கு தொலைபேசியில் அழைத்து நடந்த சம்பவத்தை தகவலாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக தகவல் அறிந்த வன அலுவலர் ராமநாதன் தலைமையில் வனத்துறையினர் ஜனார்த்தன், பரந்தாமன், பூபாலன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்தக்காயத்துடன் இருந்த வனக்காப்பாளர் பொன்னுரங்கத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்களிடம் வனத்துறையினர் தனியாக யாராவது வனப்பகுதியில் சுற்றித்திரிந்தார்களா எனக்கேட்டுள்ளனர். அதற்கு அங்கு இருந்தவர்கள் யாரையும் பார்க்கவில்லை என தெரிவித்தனர். மேலும் வனத்துறையினர் அங்கிருந்தவர்களிடம் வனப் பகுதியில் சந்தேகப்படும் படி தனியாக சுற்றி திரிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு சென்றுள்ளனர். அதன் பிறகு அங்த பகுதியில் சந்தேகபடும்படி வாலிபர் நடந்து சென்றதை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தாழைத்தூர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்த வாலிபரை சுற்றி வளைத்தனர். அதன் பிறகு அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையில் ஒரு கத்தி, கோயில் மணி மற்றும் சாவிகள் இருந்துள்ளது அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வனப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த பீகாரை சேர்ந்த வாலிபர் யாரையாவது கொலை செய்ய வந்தாரா, அல்லது பெரிய அளவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.