Crime: ரோந்தையும் மீறி இலங்கைக்கு கடத்தப்படும் பீடி இலைகள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள்
மினி லாரியில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 660 கிலோ பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல் படையினர், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது கடத்தலில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் தூத்துக்குடி பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆய்வாளர் விஜயஅனிதா, உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிலுவை பட்டியில் இருந்து கடற்கரை செல்லும் ரோட்டில் சந்தேகப்படும் படியாக வந்த ஒரு மினிலாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த மினி லாரியில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 660 கிலோ பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த இலங்கை மதிப்பு ரூ. 50 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் பீடி இலை கடத்தி வந்த மரம் ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போன்று அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் பண்டல்களுடன் வந்த நபரை போலீசார் மடக்கினர். உடனடியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். தொடர்ந்து போலீசார் சோதனை செய்த போது, அந்த மோட்டார் சைக்கிளில் சுமார் 57 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக போலீசார் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் மாத்திரைகள் மற்றும் பீடி இலையை கடத்தி வந்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.