நகை பறிப்பில் ஈடுபட்ட கோடீஸ்வரனின் மகன்... சிசிடிவி காட்சியால் சிக்கிய கதை...!
திருவண்ணாமலையில் கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் 10 சவரன் தங்க தாலியை அபகரித்துக்கொண்டு தப்பிய இளைஞரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்னக்கடை வீதியில் திருவண்ணாமலை வேங்கி கால் ஊராட்சி குபேர நகரை சேர்ந்த சந்திரசேகர் வயது (47) என்பவரது மனைவி கவிதா என்பவர் நோட்டு புத்தகம் மற்றும் திருமண அழைப்பிதழ் கார்டு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பிற்பகல் 2.30 மணி அளவில் அவசர வேலைக்காரணமாக சந்திரசேகர் வெளியே சென்றுள்ளார். அப்போது கடையில் அவருடைய மனைவி கவிதா மட்டும் இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 'ஹெல்மெட்டை' கழற்றி மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அந்த கடையில் சென்று கையில் வைத்து இருந்த திருமண அழைப்பிதழ் கார்டை காண்பித்து இதுபோன்று வேண்டும் என்று கூறி கேட்டுள்ளார்.
அதன் பிறகு கார்டு எடுப்பதற்காக கவிதா கடைக்குள்ளே சென்ற போது அந்த வாலிபர் திடீரென கடைக்குள் புகுந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கவிதாவை மிரட்டி 10பவுன் தங்க தாலிச்சரடை பறித்துக்கொண்டு அவரை கீழே தள்ளி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் துறையினர் தாலிச்சரடை பறித்து சென்றவர் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரஒ தேடிவந்தனர். அதனைத் தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் , நகர துணை ஆய்வாளர் ராஜீவ் காந்தி மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நகர் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து குற்றாவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நகைப்பறிப்பில் ஈடுபட்டது திருவண்ணாமலை பாலாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த முத்துசாமி வயது (34) என்பதும் தெரியவந்தது. மேலும் இவருடைய தந்தை பாத்திரக்கடை வைத்துள்ளார். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களும் சொகுசு கார்கள் உள்ளன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட முத்துகுமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், முத்துக்குமார் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாகவும் இதற்காக பல இடங்களில் அவர் கடன் பெற்றதாகவும், இதனால் பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து தந்தையிடம் கேட்டதற்கு அவர் தனக்கு பணம் தர மறுத்ததாகவும் கூறினார்.
மேலும் விசாரணையில், ‘கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் நகை பறிப்பில் ஈடுபட முடிவு செய்து கடந்த 8ஆம் தேதி காலையில் தனியாக இருந்த கவிதாவிடம் கத்தியை காட்டி நகையை பறித்து சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து முத்துகுமாரிடம் இருந்து 9 பவுன் தங்க நகையை காவல்துறையினர் மீட்டனர். மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய பைக்குகள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து அவரை சிரையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் உள்ள பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்