மதுபானம் கிடைக்கும் இடத்திற்கு முகவரி கேட்பதில் தகராறு - இளைஞர் அடித்து கொலை; உறவினர்கள் மறியல்
இன்று மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் முகமத்தின் உடலை சாலையில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உறவினர்கள் எச்சரிக்கை
திருவண்ணாமலை பட்டேல் அப்துல்ரசாக் தெருவை சேர்ந்தவர் முகமத் (27). பொறியியல் பட்டதாரியான இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 4 ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் நல்லவன்பாளையம் நான்கு வழி சாலையில் முகமத், அவரது நண்பர்கள் இம்தியாஸ், ஆசிக், விஜய் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருவண்ணாமலை தென்னைமர தெருவை சேர்ந்த முன்னா (25) மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்து உள்ளனர். அப்போது அவர்கள் அருகில் எங்கேயாவது மதுபானம் கிடைக்குமா என்று முகமத் தரப்பினரிடம் கேட்டு உள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் முகமத் மற்றும் அவரது நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
முகமத் இரவு சுமார் 12 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாநகர் முதல் தெரு வழியாக வீட்டுக்கு வரும் பொழுது முன்னா, அவரது தாய் ஷமா, தென்னை மரத் தெருவை சேர்ந்த விக்கி, அண்ணாநகரை சேர்ந்த அப்பு, இந்திரா நகரை சேர்ந்த மிதுலன், இவரது தம்பி வமித்ரன் ஆகியோர் சேர்ந்து அவரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே முகமத்தின் முதுகில் இரும்பு ராடால் அடித்தும், கத்தியால் குத்தியும் உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்தவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருவண்ணாமலை தாமரை குளம் அருகே இரவு 9 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாவின் தாய் அவரை கைது செய்யும் உடனிருந்து உள்ளார். அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை. பெயரளவிலேயே செயல்பட்டு உள்ளனர். சம்பவம் நடைபெற்ற உடனே அவர்களை கைது செய்யாமல் காலதாமதம் செய்ததால் கொலை செய்தவர்கள் தலைமறைவாகிவிட்டார்கள். இன்று மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் முகமத்தின் உடலை சாலையில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். காவல்துறையினர், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்தனர். எனினும், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.