’யாராவது எடுத்திருந்தா கொடுத்துடுங்க’-கோயில் கூட்டநெரிசலில் 50,000 பணம் 1.5 சவரன் தவறவிட்ட பெண்
’’எனது நகை பணத்தை எடுத்து இருந்தால் கொடுத்து விடுங்கள் நான் மிகவும் வறுமையில் உள்ளேன் உங்கள் காலில் கூட விழுகிறேன் என கதறி கண்ணீர் மல்க அழுதார்’’
பஞ்சபூத தளங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பிரதோஷம் வழிபாடு மாதத்தில் இரண்டு முறை பெரிய நந்தி பகவானுக்கு நடைபெறுவது வழக்கம் அதேபோன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது அந்த வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக உள்ளூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் என பலரும் வந்து கலந்துகொண்டு பெரிய நந்தி பகவானை வழிபடுவார்கள் நிலையில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்ணிடமிருந்து மர்ம ஆசாமிகள் 1.5 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (48), இவரது மனைவி சசிகலா (44) இந்த தம்பதியினர் மங்கலத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகளை அடமானம் வைத்து அவசர தேவைக்காக 1 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளனர். அவர்கள் பெற்று வந்த அந்த பணத்தில் அவர்களது உறவினருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, அங்கிருந்து இருவரும் திருவண்ணாமலை வந்துள்ளனர். திருவண்ணாமலையில் தனியார் அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்த நகையை மீட்பதற்காக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி அந்த நகையை மீட்டுள்ளனர். மீதமுள்ள பணத்தை தங்களது பையில் வைத்திருந்துள்ளனர்.
பின்னர் அரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி சசிகலா ஆகியோர் அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டனர். இந்த வழிபாட்டில் திரளானமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் அரிகிருஷ்ணன், சசிகலா வைத்திருந்த பையிலிருந்து 1.5 சவரன் தங்க நகை மற்றும் ₹50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த சசிகலா கோயில் வளாகத்தில் கத்தி கூச்சலிட்டு எனது நகை பணத்தை எடுத்து இருந்தால் கொடுத்து விடுங்கள் நான் மிகவும் வறுமையில் உள்ளேன் உங்கள் காலில் கூட விழுகிறேன் என கதறி கண்ணீர் மல்க அழுதுள்ளார். மேலும், அங்கிருந்த பக்தர்கள் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.
இந்தப்பிரதோஷ வழிபாட்டில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். காவல்துறை உயரதிகாரிகள் இருக்கும்போதே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் கொள்ளையர்களை கண்டுபிடிக்க அண்ணாமலையார் கோயிலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் சசிகலா திருவண்ணாமலை குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உதவி ஆய்வாளர் காலில் விழுந்து கதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.