திருவண்ணாமலையில் கத்தியை காட்டி பணம் பறித்த இளைஞர் மற்றும் சிறுவன் கைது - நகை பணம் பறிமுதல்
’’18 வயது பூர்த்தியடையாத சிறுவன் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைப்பு’’
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, நாளால்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மணிநாவிதர் மகன் வெற்றிவேல் (21) சாத்தனூரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகின்றார். காலை சுமார் 8.30 மணிக்கு பெட்ரோல் பங்கிற்கு வேலைக்கு செல்லும் பொழுது தானிப்பாடி மற்றும் தண்டராம்பட்டு சாலையில் உள்ள நாளால்பள்ளம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்போது பதிவெண் இல்லாத கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் வெற்றிவேல் கழுத்தில் கத்தியை வைத்து, அவரிடம் இருந்து 5000 ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அதனை தட்டி கேட்க சென்ற போது அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வெற்றி வேல் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து அளித்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவுப்படி, திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை அவர்களின் தலைமையில், தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் தனலட்சுமி, மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தண்டராம்பட்டில் இருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் உள்ள துரிஞ்சிமரம் பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதி வழியாக கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தவர்களை காவல்துறையினர் மடக்கி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் முன்னுக்கு பின்னாக வாலிபர்கள் பதில் அளித்துள்ளனர். அதன் பிறகு இரண்டு வாலிபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் வெற்றி வேலிடம் கத்தியை காட்டி பணம் பறித்த நபர்களான கோட்டீஸ்வரன் (24) 8 ஆவது தெரு வீரணூர் கிராமம், சின்னியம்பேட்டை அஞ்சல், தண்டராம்பட்டு தாலுக்கா என்றும், மற்றுமொருவர் 18 வயது பூர்த்தியடையாத இளஞ்சீரார் என தெரியவந்தது.
மேலும் அவர்கள் இதற்கு முன்பு தண்டராம்பட்டு மற்றும் தானிப்பாடி பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்து. கோடீஸ்வரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். அதனைத தொடர்ந்து மற்றொருவர் 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவர்களிடம் இருந்து ஒரு கத்தி, 5,000 பணம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.