Crime: கொடுக்கல்-வாங்கல் தகராறில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை பெரியகுளத்தில் பரபரப்பு
தேனி அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரம் கல்லார் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (26). பெரியகுளம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (23). அவருடைய தம்பி அருண்குமார் (21). இவர்களுக்கும், விஜயராஜிக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் விஜயராஜை செல்போனில் சூரியபிரகாஷ் நேற்று தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது கொடுக்கல்,வாங்கல் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தென்னந்தோப்புக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி விஜயராஜ் அந்த தென்னந்தோப்புக்கு சென்றுள்ளார். அங்கு சூரியபிரகாஷ், அருண்குமார் மற்றும் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (25), பிரதீப் (23), சசி பிரபு (23), முத்துராஜ் பிரதீப் (23) ஆகியோர் இருந்தனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது விஜயராஜிக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் விஜயராஜை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் அவர்கள், ஆட்டை அறுப்பதை போல கத்தியால் விஜயராஜின் கழுத்தை அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்தநிலையில் விஜயராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பெரியகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விஜயராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதில் சூரியபிரகாஷ், அருண்குமார், ரஞ்சித், சசி பிரபு ஆகிய 4 பேர் பெரியகுளம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
Kalakshetra Row: 'வயசான காலத்துல உடம்ப பார்த்துக்கோங்க..' நடிகை குட்டிபத்மினியுடன் மோதும் அபிராமி
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரதீப், முத்துராஜ் பிரதீப் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொடுக்கல்-வாங்கல் தகராறில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்