Crime: பாலியல் தொல்லையால் அலறிய சிறுமி; தீ வைத்து கொல்ல முயன்ற சிறுவன் - தேனியில் அதிர்ச்சி..!
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை. சிறுவனிடம் போலீசார் விசாரணை.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன், அவரது மனைவி சபரி சூர்யா. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் சேலத்தில் தங்கி வேலை செய்து வருவதால், சிறுமி எரசக்கநாயக்கனூரில் உள்ள சபரி சூர்யாவின் தாயார் வீட்டில் தங்கி அங்கு உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சபரி சூர்யாவின் தாயார் அமலா புஷ்பம் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு ஆயாவாக பணியாற்றி வருகிறார்.
நேற்று ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி தனது பாட்டியுடன் அவர் வேலை செய்யும் அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாட்டி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுமி பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைக் கேட்டு அதிர்ந்து போன அமலா புஷ்பம் விரைந்து சென்று சிறுமியை பார்த்துள்ளார். அப்போது அவரது உடையில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்துள்ளது.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அமலா புஷ்பம் உடனடியாக தீயை அணைத்து சிறுமியை மீட்டார். ஆனால் சிறுமி மீது பற்றிய தீயினால் வயிற்றுப் பகுதி மற்றும் கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக சிறுமியை அவரது பாட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு 45% சதவீதம் உடலில் தீக்காயத்துடன் இருக்கும் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சம்பவம் குறித்து சின்னமனூர் தனி படை காவலருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அப்பகுதியில் இருந்த விஜயகுமார் (வயது 16) சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபடுத்தி உள்ளார். அதனால் சிறுமி அலறவே அவரை மிரட்டுவதற்காக தீயை பற்ற வைத்த போது சிறுமி மேல் தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் தனிப்படை காவல்துறையினர் விரைந்து நடவடிக்கையை எடுத்து சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டாங்ரே நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்த கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்