Godmen of India | ஆசாராம் முதல் சிவசங்கர் பாபா வரை ..- பாலியல் சர்ச்சை பாபாக்கள் ஒரு ரீவைண்ட்!
பாபாக்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒரே ரகம் என்பதாக இப்படியான காட்மேன்கள் என்றாலே பாலியல் சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கை. சிவசங்கர் பாபா போல கடவுளின் பெயரால் பாலியல் வன்முறை சர்ச்சைகளில் சிக்கிய செக்ஸ் சாமியார்கள் யார்? யார்?
![Godmen of India | ஆசாராம் முதல் சிவசங்கர் பாபா வரை ..- பாலியல் சர்ச்சை பாபாக்கள் ஒரு ரீவைண்ட்! The self claimed Godmen of India and the sexual harassment cases against them Godmen of India | ஆசாராம் முதல் சிவசங்கர் பாபா வரை ..- பாலியல் சர்ச்சை பாபாக்கள் ஒரு ரீவைண்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/14/a7c67ea652d0892e87580d1a37006f08_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தன் பள்ளி மாணவர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகச் சென்னை கேளம்பாக்கம் சூஷில் ஹரி பள்ளியை நடத்திவரும் சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி வழக்கு விசாரணை செய்துவருகிறது. சிவசங்கர் பாபா தமிழ்நாட்டுக்குப் புதிய பெயர் அல்ல. கல்கி சாமியார், தேங்காய் மூடி சித்தர், சுருட்டு சாமியார் என விநோத பெயர்கொண்ட தமிழ்நாட்டுச் சாமியாராகவும், உலகின் சூப்பர் ஸ்டாரும்-உலகநாயகனுமாகவும் உலா வந்தவர்கள் யாகவா முனிவரும்-சிவசங்கர் பாபாவும். சிவசங்கர் பாபா சென்னையின் பல முக்கியப் பிரமுகர்களின் குரு. தன்னை ஹரி, சிவன், முருகன் போன்ற கடவுள்களின் அவதாரம் எனச் சொல்லிக்கொள்பவர். இப்படி விசித்திரமான பயோடேட்டா இவருக்கு இருந்தாலும் யாகவாவிடம் தொலைக்காட்சிச் சேனல் தோளில் போட்டிருந்த துண்டால் அறை வாங்கியவர் என்பதுதான் இவரது முதன்மையான அடையாளம்.
இந்த சிவசங்கரின் கேளம்பாக்கம் சுஷீல் ஹரி பள்ளி மாணவர்கள்தான் தற்போது இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை பக்தி என்கிற பெயரில் அத்துமீறியது, வெளிநாட்டுக்கு பள்ளி மாணவர்களை உடன் அழைத்துச் செல்வது என இவர்மீதானக் குற்றப்பட்டியல் நீள்கிறது. பாபாக்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒரே ரகம் என்பதாக இப்படியான காட்மேன்கள் என்றாலே பாலியல் சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கை. சிவசங்கர் பாபா போல கடவுளின் பெயரால் பாலியல் வன்முறை சர்ச்சைகளில் சிக்கிய செக்ஸ் சாமியார்கள் யார்? யார்?
1. குர்மீத் ராம் ரஹீம் - தேரா சச்சா சவுதா.
பிறந்தது பஞ்சாப் மாநிலம். தனது 23 வயதில் தன்னை சாமியாராக அறிவித்துக்கொண்ட நபர். வளர்ப்புப் பெண்ணிடமே பாலியல் ரீதியான உறவு, தன் பெண் சீடர்களில் இருவரிடம் பாலியல் வன்முறை, இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளரின் படுகொலை, அதற்கு உதவிய தனது மேனேஜரையே போட்டுத்தள்ளியது எனக் அடுக்கடுக்கான குற்றத்தால் அறண்ட பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2. ஆசாராம் பாபு
சர்வதேச அளவில் 400 ஆசிரமங்கள், அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, திக் விஜய் சிங் எனக் கட்சிப் பாகுபாடில்லாமல் பக்தர்கள், 40 மில்லியன் பாலோயர்கள் என ஸ்டார் சாமியாராக வளம் வந்த 80 வயது ஆசாராம் பாபு மீது சிறுமியை மீதி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 2013ல் புகார் அளிக்கப்பட்டது. கூடவே ஆசாராம் நடத்திய பள்ளிகளில் கிடைத்த இறந்த மாணவர்களின் சடலங்கள், நில அபகரிப்பு என அடுக்கடுக்காக எழுந்த புகாரில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு ஜோத்பூர் சிறையில் தன் இறுதிநாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார் இந்த சாமியார்.
3.ராதே மா
கையில் சூலம், கலர்ஃபுல் காஸ்ட்யூம் சகிதம் 2015ல் திடீரெனப் பிரபலமானவர் ராதே மா. டெய்லராக இருந்தவர், 20 வயதிலேயே இரண்டு மகன்களுக்குத் தாயானவர். பிரபலமான சூட்டுடனே இவர் மீது இந்தி தொலைக்காட்சி நடிகர் டாலி பிந்தரா பாலியல் வன்முறைப் புகாரை அளித்தார். பக்தர்களிடம் பாலியல் ரீதியாகத் தூண்டும் வகையில் பேசுவது, தனது பக்தர்களிடம் டாலி பிந்தராவை நெருக்கமாக இருக்கச் சொல்வது, ஆபாசப் புகைப்படங்கள் என கேட்கவே கூசும் வகையிலான புகார்கள் இவர் மீது பதியப்பட்டன.வழக்குகள் நிலவரம் தெரியவில்லை என்றாலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீரிஸில் சர்ப்ரைஸ் கெஸ்டாக வலம் வந்தார்.
4. பிரேமானந்தா
1984ல் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து திருச்சியில் தனது ஆசிரமத்தை அமைத்தவர். 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஆசிரமத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தனது கூட்டாளிகள் ஆறு பேருடன் கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பாலியல் குற்றச் சாமியார்களின் ஆதி ஊற்று இந்தப் பிரேமானந்தா எனலாம்.
5. நித்யானந்தா
தமிழ்நடிகர் ரஞ்சிதாவுடன் ஆபாச வீடியோ, வெளிநாடுகளில் இருந்து ஆசிரமத்துக்கு வந்து தங்கும் பெண் சீடர்களிடம் பாலியல் அத்துமீறல், சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் என அடுக்கடுக்காகப் புகார்கள் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டாலும் இந்திய தண்டனைச் சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியாமல் நாட்டை விட்டே வெளியேறித் தனக்கென கைலாசா என்னும் தனி நாட்டையே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறார் இந்த ஏமாற்றுப் பேர்வழி.
6. ஜெயேந்திரர் - விஜயேந்திரர்
ஒரு மதத்தின் பன்னெடுங்கால வரலாற்றின் சாட்சியாக இருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீது பாலியல் புகார்கள் எழுந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. குடியரசுத்தலைவர்கள் வரை அடிக்கடி வந்து செல்லும் பீடத்தின் பீடாதிபதி மீது 2004ல் சங்கரராமன் கொலைவழக்கில் கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது கூடவே சில பெண்கள் ஜெயந்திரர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவித்தனர். எழுத்தாளர் அனுராதா ரமணன் புகார் தெரிவித்தவர்களில் முதன்மையானவர், இவர்கள் தவிர நாட்டியக் கலைஞர் ஸ்வர்ணமால்யா உட்பட மேலும் சில பெண்களும் பீடாதிபதிகளின் மீது பாலியல் புகார்களை முன்வைத்தார்கள்.
மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்துவருவதற்கு சாமியார்களுக்கு நடுவே கடவுளின் பெயரால் இத்தனைக் கொடூரங்களை அரங்கேற்றும் பாபாக்களுக்கும் சாமியார்களுக்கும் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்?
Also Read: கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)