![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime : போலீஸ் உடை.. வாகன தணிக்கை... வசூல் வேட்டை.. போலீசையே அதிரவைத்த போலி எஸ்.ஐ கைது கதை தெரியுமா?
காவல் உதவி ஆய்வாளர் போல உடையணிந்து வாகன தணிக்கை செய்து, வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime : போலீஸ் உடை.. வாகன தணிக்கை... வசூல் வேட்டை.. போலீசையே அதிரவைத்த போலி எஸ்.ஐ கைது கதை தெரியுமா? The police arrested a fake police officer who was dressed as a police sub-inspector and conducted a vehicle inspection Crime : போலீஸ் உடை.. வாகன தணிக்கை... வசூல் வேட்டை.. போலீசையே அதிரவைத்த போலி எஸ்.ஐ கைது கதை தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/03/6183a58d75c5fa6bce4e5f7e49a58e491670086253498188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் போல உடையணிந்து வாகன தணிக்கை செய்து, வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே காவல் உதவி ஆய்வாளர் போல ஒருவர் வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் அந்த சாலையில் வந்தபோது, காவல் உதவி ஆய்வாளர் போல உடையணிந்த நபரை பார்த்த போது, அவர் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சசிகுமார் கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற கருமத்தம்பட்டி காவல் துறையினர் உதவி ஆய்வாளர் உடையில் கருப்பு நிற புல்லட் உடன் ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அந்த நபர் விருதுநகர் மாவட்டம் மல்லங்கிணறு கிராமத்தை சார்ந்த செல்வம் (39) என்பதும், திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் உள்ள நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் வாகன தணிக்கை செய்வது போல பணம் வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது. தெக்கலூர் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் செல்வம் தான் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி ஒரு பெண்ணை திருமணம் செய்ததும், அவர் தங்கியிருக்கும் இடத்தில் உதவி ஆய்வாளர் எனக் கூறி தினமும் சீருடையிலே செல்வதும், நூற்பாலைக்கு வேலைக்கு செல்லும் போது வேறு உடையிலும் சென்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வம் உதவி ஆய்வாளர் எனக்கூறி வேறு எதேனும் மோசடி செய்துள்ளாரா, அவருக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து செல்வத்தை கைது செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். செல்வம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த கோவை - அவினாசி சாலை வழியாக திருப்பூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணித்த நிலையில் செல்வம் பாதுகாப்பு அதிகாரியாக அங்கு பணியில் இருந்தாரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவையில் இருந்து திருப்பூருக்கு முதல்வர் சாலை வழியாக பயணித்த போது, நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது போலி போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)