கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தால் மகனை கொன்ற தாய் உட்பட 3 பேர் கைது...!
’’கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த மகனுக்கு கண்ணில் மிளகாய் பொடி தூவி நெருப்பால் சூடு வைத்து கொன்றது விசாரணையில் அம்பலம்’’
![கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தால் மகனை கொன்ற தாய் உட்பட 3 பேர் கைது...! The mother who gave birth to the boy who was in the midst of a fake love was tortured to death 3 persons including mother were arrested கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தால் மகனை கொன்ற தாய் உட்பட 3 பேர் கைது...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/07/63883a326ae653581814aeba850fa492_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்லேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லைக்கு செல்லும் வழியில் மல்லேஸ்வரன் மலை அடிவாரம் பகுதியில் சிலர் விறகு பொறுக்க சென்றனர். அப்போது மலை அடிவாரத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளான். இது குறித்து பர்கூர் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் பர்கூர் காவல்துறையினர் விசாரணை செய்தனர். கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலில் பல இடங்களில் பிரம்பால் அடித்த காயங்கள் மற்றும் மேலும் தீயால் சுட்டகாயத்துடன் இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் சிறுவர்கள் காணவில்லையா என்று விசாரித்தனர். மேலும் அண்டை மாநிலங்களான ஆந்திர, கர்நாடக மாநிலத்திலும் உள்ள காவல் நிலையங்களிலும் சிறுவர்கள் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பர்கூரில் கொலையான சிறுவனின் புகைப்படம் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரு BTM லே அவுட் பகுதியில் குடியிருந்து வரும் தனலட்சுமி, தனது மகள் ஷோபாவுடன் பெங்களூரு மைக்கோலே அவுட் காவல் நிலையத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி வந்துள்ளார். அங்கு தனலட்சுமி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் தனது மற்றொரு மகள் நதியாவின் மகனான ராகுலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக பதிவான வழக்குகள், புகைப்படங்களை பார்த்ததில் பர்கூரில் கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுவனின் புகைப்படத்தை காண்பித்த போது அது பெங்களூருவை சேர்ந்த ராகுல் என உறுதி செய்தனர். பிறகு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவன் ராகுலை அவனது தாய் நதியா, கள்ளக்காதலன் சுனில்குமார், இவரது மற்றொரு கள்ளக்காதலி சிந்து ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கைதான சுனில்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் விசாரணையில் பல திடிக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில் சுனில்குமார் பெங்களூருவில் வசித்து வருவதாகவும். அவர் மீது பெங்களூரு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நதியாவிற்கும், ரவிக்கும் திருமணம் ஆகி குழந்தை ராகுல் பிறந்தான். அவனுக்கு 3 மாதம் இருக்கும் போது ரவி கருத்து வேறுபாடு காரணமாக நதியாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு சுனில் குமாருக்கும், நதியாவிற்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ராகுல் குழந்தையாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் பின்னர் அவன் வளர, வளர அவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளான். இதனால் சுனில் குமாரும், நதியாவும் சிறுவன் ராகுலை அவ்வப்போது பிரம்பால் அடித்தும் சூடு வைத்தும் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சுனில் குமாருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் சிந்து என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. சுனில்குமார் நதியாவுடனும், சிந்துவுடனும் உல்லாசமாக இருந்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சுனில் குமாருக்கும், நதியாவிற்கும் இடையே இருந்த உல்லாச வாழ்க்கைக்கு சிறுவன் ராகுல் இடையூறாக இருந்துள்ளதால். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நதியா காய்கறி வியாபாரம் செய்வதற்காக சென்று விட்டாள். அப்போது சிறுவன் ராகுல் வீட்டில் இருந்துள்ளான் அந்த நேரம் சுனில் குமார் அவனை அடித்ததில் சிறுவன் இறந்து விட்டான்.
பின்னர் இதையடுத்து 2 இருக்கைகள் கொண்ட சிறிய ரக காரில் சிறுவன் ராகுலின் உடலை பின்னால் வைத்து. சுனில் குமாரும் அவனது மற்றொரு கள்ளக்காதலி சிந்துவும் சிறுவன் உடலுடன் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கு உடலை வீசிவிட்டு செல்ல திட்டமிட்டு வந்துள்ளனர். அவர்கள் கிருஷ்ணகிரி வழியாக குப்பம் சென்று உடலை போட திட்டமிட்டுள்ளனர். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியான குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே போலீஸ் சோதனை சாவடி இருந்ததால் அந்த முடிவை கைவிட்டு, பசவண்ண கோவில் வழியாக கொட்லெட்டி சென்று மலை அடிவாரத்தில் உடலை போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் தப்பி சென்றுவிட்டனர். இந்த விவரத்தை பின்னர் நதியாவிடம் கூறியுள்ளனர்.
மேலும் சிறுவன் காணாமல் போனது முதல் அவனது பாட்டி தனலட்சுமி, பெரியம்மா ஷோபா ஆகியோர் அடிக்கடி கேட்டு வந்தனர். அதற்க்கு சிறுவன் வெளியூரில் விடுதியில் தங்கி படிக்கிறான் என்று கூறி வந்துள்ளனர். 6 மாதங்களுக்கும் மேலாக அவன் வராததாலும், பேசாததாலும் சந்தேகத்தில் அவனது பாட்டி காவல்நிலையத்தில் புகார் செய்ததுள்ளார். அதில் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் போலிசாரிடம் மாட்டிக் கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். பின்னர் இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலிசார் பெங்களூரு சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவன் ராகுலின் உடல் பர்கூரில் கிடந்ததால் வழக்கை பர்கூருக்கு மாற்ற பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பர்கூர் DSP தங்கவேல் மற்றும் போலீசார் இன்று பெங்களூரு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனை அவனது தாய், கள்ளக்காதலன் மற்றும் மற்றொரு கள்ளக்காதலி உதவியுடன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)