சிறப்பு டிஜிபிக்கு தேவையான நிதி வழங்கப்படுகிறதா? - மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கேள்வி!
பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சிறப்பு டிஜிபிக்கு அரசு அதிகாரிகளுக்கான மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சிறப்பு டிஜிபி, அரசு அதிகாரிகளுக்கான மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு ராஜேஷ் தாஸுக்குப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகும், வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதி வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் டெல்டா மாவட்டத்தில் எஸ்.பியாகப் பணியாற்றும் இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் சீண்டல் செய்ததாகப் புகார் அளித்தார். அதனையடுத்து, சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவதாக அப்போதைய தமிழக அரசின் உள்துறை செயலர் பிரபாகர் உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக, அவரது பொறுப்பில் ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டதோடு, ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் சீண்டல் புகாரை விசாரிக்க 6 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்க வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை செங்கல்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் தடுத்து நிறுத்திய எஸ்.பி.கண்ணன் மற்றும் ஐ.ஜி ஒருவர் மீது புகார் எழுந்தது. அதனையடுத்து அவர் மீதான பாலியல் சீண்டல் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார் அன்றைய டிஜிபி திரிபாதி. அதனைத் தொடர்ந்து, டிஜிபி மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணைக்குப் பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சி.பி.சி.ஐ.டி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அப்போது குற்றச்சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்பட்டிருப்பதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை எனவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கைச் செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும் டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், டிஜிபி தாக்கல் செய்த இந்த மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, வழக்கை மூன்று மாதங்களில் முடிக்குமாறு விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி , அரசு அதிகாரிகளுக்கான மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரசு அதிகாரிகளின் பணியிடை நீக்கம், சம்பளப் பிரச்னைகள் முதலானவற்றை விசாரிக்கும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு மீது விசாரணை செய்து, அவரது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகும், வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதி வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.