சிறையில் இருந்த அண்ணனுக்கு பாசமாக தங்கை கொடுத்த பரிசு - சிறை காவலர்கள் அதிர்ச்சி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை கைதியாக இருந்து வரும் அண்ணனுக்கு தங்கை கஞ்சா வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை அருகே அமைந்துள்ள புழல் சிறை, மிக முக்கிய சிறை சாலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அவ்வப்பொழுது புழல் சிறை மீது பல்வேறு, குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த செல்வா என்கிற வெள்ளை செல்வா. இவர் மீது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சென்னை கோயம்பேடு போலீசார் வெள்ளை செல்வாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
வெள்ளை செல்வா புழல் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார். சிறையில் உள்ள செல்வாயை சந்திக்க அவரது தங்கை மீனாட்சி சமீபத்தில் வந்துள்ளார். அவர் அண்ணனுக்கு கொடுப்பதற்காக புதிய ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்துள்ளார். அப்பொழுது காவல் அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்கள் ஜீன்ஸ் பேண்ட்டை பரிசோதித்த போது, பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது . அண்ணன் செல்வாக்கு பாசமாக கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த மீனாட்சியை கைது செய்து சிறை காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் புழல் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் நேற்று இரவு சிறை காவலர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது