’செய்தியை பார்த்துதான் மகன் இறந்தது தெரியும்’ -கஸ்டடியில் இறந்த சத்தியவாணனின் தாய் பேட்டி
’’கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்து விட்டனர். இன்று காலை ஊடகங்க செய்தியை பார்த்த பின்தான் எனது மகன் இறந்தது தெரியும்’’
தஞ்சை சீதா நகரில் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சுவாமிநாதன் என்பவரது வீட்டில் கடந்த 10ஆம் தேதி 5 லட்சம் பணம் மற்றும் 6 பவுன் நகைகள் திருட்டு போனது. இக்கொலை சம்பவம் தொடர்பாக சுவாமிநாதன் கும்பகோணம் மேற்கு காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேற்கு போலீசார் கடந்த 12ம் தேதி வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே, தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் தனிப்படை எஸ்ஐ சந்திரசேகரன் மற்றும் டேவிட் மற்றும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் கடந்த 12 தேதி இரவு தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்குள் சந்தேகத்திற்கிடமாக படுத்து இருந்த சீர்காழி, தண்டன்குளம், புதுப்பட்டிணம் பழைய ரோட்டை சேர்ந்த சந்திரசேகரன் மகன் சேர்ந்த சத்தியவானன் (32), சென்னையை சேர்ந்த அப்துல் மஜீத் (41), தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மூன்று பேரும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலைய பின்புறம் உள்ள ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை தொடங்கினார். அப்போது தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல், கடலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற 15க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் கிடைத்த கைரேகையும் சத்தியவாணனின் கைரேகையும் ஒத்துப்போனது தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 11 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சத்தியவாணன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளார். மீதமுள்ள அப்துல் மஜீத் மற்றும் சூர்யாவை, கஞ்சா வைத்திருந்தாக போலீசார் வழக்கு பதிந்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில் இன்று மதியம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள சத்தியவானனின் உடலை பிரேத ஆய்வு விசாரணை செய்வதற்காக தஞ்சை குற்றவியியல் நீதித்துறை நடுவர் முகமதுஅலி முன்பு, சத்தியவானனின் சகோதரி சண்முகபிரியா, இஸ்லாமியர்கள் அணியும் பர்தா அணிந்து கொண்டு தனது உறவினருடன், உடலை பார்வையிட்டு தனது சகோதரன் தான் ஒப்புக்கொண்டார். பின்னர், அவரது உடலை உடற்கூறு செய்வதற்காக பலத்த போலீசார் பாதுகாப்புடன், எடுத்து செல்லப்பட்டது.
போலீசார் கூறுகையில், சுவாமிநாதன் வீட்டில் திருட்டு நடந்த போது எடுத்த கைரேகையும், சத்தியவாணனின் கைரேகையும் ஒத்துப்போனது. அதன் பின் நேற்று சத்தியவாணனை, திருடிது எப்படி என செய்முறை செய்து காட்டுவதற்காக சென்ற போது, தண்டவாளத்தை கடக்கும் போது, இரண்டு முறை கீழே விழுந்தான். அப்போது, போலீசார், சத்தியவாணனிடம் கேட்ட போது, எனக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது, கஞ்சா அடிக்காததால் எனக்கு மயக்கம் வந்து விழுந்து விட்டேன் என்று கூறிதான் சுவாமிநாதன் வீட்டில் திருடிது குறித்து செய்முறை விளக்கமம் செய்து காட்டினார்.
கீழே விழுந்ததால், உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது, சத்தியவாணன், நெஞ்சுஎரிச்சலாக உள்ளது என்றார். பின்னர் அவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது என அங்குள்ள மருத்துவர்கள் கூறவே, தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு வரப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல் இறந்தார் என காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.
திருமணமாகாத சத்தியவாணனுக்கு வனஜா என்ற தாயும், காய்த்திரி, சண்முகப்பிரியா ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரம் சண்முகப்பிரியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால், தனது புகைப்படம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, பலத்த போலீசார் பாதுகாப்புடன் ஆட்டோவில் இஸ்லாமிய பெண்கள் அணியும் கருப்பு நிற பர்தா அணிந்து வந்திருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மார்ச்சுவரியில் நடந்த விசாரணையை முடித்து விட்டு, உறவினருடன் ஆட்டோவிலேயே சென்று விட்டார்.
இது குறித்து சத்தியவானனின் தாய் வனஜா கூறுகையில்,
எனது மகன் சத்தியவாணன், டிரைவராக வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவான். சத்தியவாணன், நேற்று காலை, என்னிடம் போன் மூலம் பணம் என்னிடம் இல்லை 1000 ரூபாய் வேண்டும் என்றான். நானும் தருகிறேன் என்றேன். பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நேற்று இரவு போலீசார் போன் செய்து சத்தியவானனுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்து விட்டனர். இன்று காலை ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்த பின்னர் தான் எனது மகன் சத்தியவாணன் இறந்த செய்தி தெரியும் என்றார்.