Crime: சேலம் பட்டறை அதிபர் கொலை வழக்கில் கூலிப்படை ஏவிவிட்ட 3 பேர் கைது
கூலிப்படையை சேர்ந்த மூன்று நபர்களை ஈரோட்டில் முகாமிட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை நரசிம்செட்டி ரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவர் பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிக்காடு பகுதியில் கிரில் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அரிவாளால் சிவகுமார் மற்றும் அவரது பட்டறையில் பணியாற்றி வந்த சாரதி, பாஸ்கர் ஆகியோர் மீது கடுமையான கொலை வெறி தாக்குதல் நடத்தினர். மேலும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில், படுகாயமடைந்த மூவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு சம்பவத்தில் இந்தகொலை முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.
இதில் சிவகுமாரின் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமலைகிரியை சேர்ந்த ஏழுமலை என்பவர் குடியிருந்து வந்தார். சிவகுமாரின் தந்தை இறந்த நிலையில் வீட்டை காலி செய்யுமாறு கூறியபோது, அந்த வீட்டை தங்களுக்கு கொடுக்குமாறு கூறி, 4 லட்சத்து 90 ஆயிரம் வாங்கியதாக ஏழுமலை தெரிவித்தார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 21 லட்சம் கொடுத்தால் வீட்டை காலிசெய்து விடுவார்கள் என்று காவல்துறையினர் சிவகுமாரிடம் தெரிவித்தனர். இதன்படி முதற்கட்டமாக 5 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 16 லட்சம் கொடுக்க வேண்டும் ஆனால் சொத்தின் மதிப்பு தற்போது 90 லட்சம் இருக்கும். இந்த நிலையில் தான் சிவக்குமார் மீது அரிவாள் வெட்டு விழுந்தது தெரியவந்தது. இதனிடையே ஏழுமலையின் மருமகன் பாபு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதன்பெயரில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது. இதில் சிவகுமாரை அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் தப்பி இருப்பதும், கொண்டலாம்பட்டி வரை சென்றுவிட்டு மீண்டும் சம்பவம் நடந்த பகுதியை நோக்கிய வந்தனர். அதே நேரத்தில் சிவக்குமாரை வெட்டுவதற்கு வந்தபோது இரண்டு சக்கரவாகனத்தில் வந்தனர். அப்படி என்றால் இன்னொருவர் எப்படி வந்தார் என விசாரித்தபோது அவரை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டு சென்றது தெரியவந்தது.
ஆனால் இறக்கிவிட்டு சென்ற நபர் முகத்தை மறைக்கவில்லை அந்த நபர் முகத்தை வைத்து விசாரணை நடத்தியதில் சேலம் செவ்வாய்பட்டையை சேர்ந்த கிஷோர் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் சிவகுமாரை கொலை செய்ய பாபு, விமல்ராஜ் ஆகியோர் ஈரோட்டை சேர்ந்த கூலிப்படையை கொண்டு வந்தது தெரியவந்தது. இதற்காக 1.50 லட்சம் வரை கூலிப்படைக்கு கொடுத்தும், கொலை திட்டத்தை போட்டு கொடுத்துவிட்டு பாபு வெளியூருக்கு சென்றதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பலை கூண்டோடு பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் பள்ளப்பட்டி காவல்துறையினர் சண்முகம் என்பவரை நான்கு பேர் மடக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பெரில் சூரமங்கலம் காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கியது. இதில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் பாபு, விமல்ராஜ், கிஷோர், மாரியப்பன் என்பது தெரியவந்தது. இதில் மாரியப்பன் தப்பிசென்ற நிலையில் மற்ற மூன்று பேர் பிடிபட்டனர். அப்போது நடத்தி விசாரணையில் கிரில் பட்டறை உரிமையாளர் சிவகுமாரை கொலை செய்ய கூலிப்படையை ஏவியது, பாபு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூலிப்படை வாலிபர் ஒருவரை இறக்கிவிட்டு சென்றது கிஷோர் என்பதும் தெரியவந்தது. இவர்களில் பாபு விமல்ராஜ், கிஷோர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதே நேரத்தில் கூலிப்படையை சேர்ந்த மூன்று நபர்களை ஈரோட்டில் முகாமிட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.