Crime: சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை செருப்பால் அடித்த பெண்... சேலத்தில் பரபரப்பு
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலன் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளப்பட்டி போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களின் காரையும் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்பிய பயணிகளால் நேற்று இரவு சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பள்ளப்பட்டி காவல் நிலைய காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இரவு 9 மணிளவில் சூரமங்கலம், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்கு, அவரது சகோதரி கமலேஸ்வரி மற்றும் உறவினர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வரும் வாயில் வழியாக தங்களது ஸ்கார்பியோ காரை நிறுத்த முயன்றனர். அப்போது, அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் காரை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அப்போது கார்த்திக் அந்த காரை ஆய்வாளர் மீது மோதும்படி காரை இயக்கியதால் போலீசார் சரவணவேலன் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் அமர்ந்திருந்த கமலேஸ்வரி தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கொண்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலனை சரமாரியாக அடித்துள்ளார். அதனை தடுக்க சென்ற போலீசாருக்கும் அடி விழுந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கமலேஸ்வரி சாலையில் உருண்டு பிரண்டு ரகளை செய்தார். பின்னர் காரில் வந்த மூன்று பேரையும் போலீசார் குண்டு கட்டாக காவல்துறையினரின் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலன் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளப்பட்டி போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களின் காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது அரசியல் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாச வார்த்தைகள் திட்டுதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளரை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பெண் செருப்பால் அடித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.