Crime: ஒரு பெண்ணுக்கு இரண்டு பேர் போட்டி... கள்ளக்காதலில் தகாத உறவு... கழுத்தை அறுத்து டிரைவர் கொலை..
கொலை பற்றி தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குமரவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இக்கொலையில் ஈடுபட்ட பிரகாஷ், அவரது நண்பர்களான மாணிக்கம், கனகராஜ் ஆகிய 3 பேர் கைது.

சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மோகன் மகன் குமரவேல், டெம்போ டிரைவர். இவர், வீராணம் பகுதியில் உள்ள விவசாய பூந்தோட்டங்களில் இருந்து பூக்கள் மூட்டைகளை வாங்கி சேலம் வஉசி மார்க்கெட்டிற்கு டெம்போவில் கொண்டு வந்து சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். குமரவேல், கடந்த 6 ஆண்டுக்கு முன் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், சில மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனிடையே குமரவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்து ஒன்றாக இருந்து வந்துள்ளார். அதே வேளையில், அப்பெண்ணுக்கு வீராணம் துளசிமணியனூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடனும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரும் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனை அறிந்த குமரவேல், பிரகாசை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: பரபரக்கும் ஈரோடு இடைத்தேர்தல்! வெற்றி யாருக்கு? தொடங்கியது வாக்குப்பதிவு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குமரவேல், அப்பகுதியில் உள்ள துளசிமணியனூர் அய்யனாரப்பன் கோயில் அருகே மது குடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான வீமனூரை சேர்ந்த மாணிக்கம், டி.பெருமாபாளையம் வளையகாரனூரை சேர்ந்த கனகராஜ் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் குமரவேலிடம், குறிப்பிட்ட அந்த பெண்ணுடன் இருக்கும் தொடர்பை கைவிடும்படி கூறி தகராறு செய்துள்ளனர். திடீரென குமரவேலை தாக்கி கீழே தள்ளி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.
பின்னர், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். குமரவேலின் உறவினர்கள், சம்பவ இடம் வந்து, குமரவேலின் உடலை பார்த்து கதறியழுதனர். இக்கொலை பற்றி தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குமரவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலையில் ஈடுபட்ட பிரகாஷ், அவரது நண்பர்களான மாணிக்கம், கனகராஜ் ஆகிய 3 பேரையும் நள்ளிரவில் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பிரகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி! – காலையிலேயே சோக சம்பவம்
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "முதலில் அந்த பெண்ணுடன் குமரவேலுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரகாசும் அந்த பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அய்யனாரப்பன் கோயில் அருகில் உள்ள ஓடைப்பகுதியில் குமரவேல் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, பிரகாஷ் உள்பட 3 பேரும் போதையில் வந்து, அந்த பெண்ணுடன் தொடர்பை கைவிடுமாறு மிரட்டி உள்ளனர்.
இந்த மோதலில், குமரவேலை கீழே தள்ளிவிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டோம்," என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான பிரகாஷ் மீது அடிதடி, வழிப்பறி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடி பட்டியலில் இருக்கும் பிரகாசை ஒருமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் வைத்துள்ளனர். தற்போது, கொலை வழக்கில் பிரகாஷ் மற்றும் கூட்டாளிகள் 2 பேர் கைதாகியுள்ளனர். கைதான 3 பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஒரு பெண்ணுடன் 2 பேர் தகாத உறவு வைத்துக்கொண்ட மோதலில் டெம்போ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

