Crime: 3வது நபரின் உறவை கைவிட மறுத்த பெண்; கோபத்தில் 2வது நபர் செய்த செயல்
மாதேஸ்வரன் மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ஷெகனாஷ்வுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (48). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஷெகனாஷ் (42) என்பவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் மாதேஸ்வரனுக்கும், ஷெகனாஷ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளத் தொடர்பாக மாறியது. மாதேஸ்வரன் மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ஷெகனாஷ்வுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையில் ஷெகனாஷ்க்கும் இதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் ஒன்றாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாதேஸ்வரன் ஷெகனாஷை கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர் அந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாதேஸ்வரனுக்கும், ஷெகனாஷ்வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி உள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன் திடீரென துண்டால் கழுத்தை சுற்றி இறுக்கி உள்ளார். இதில் வலியால் அலறி துடித்த ஷெகனாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து மாதேஸ்வரன் தப்பி சென்றார். உடனே அன்னதானப்பட்டி காவல் துறையினர் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ஷெகனாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் மாதேஸ்வரன் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு கொரோனா பரிசோதனை செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.