திருநங்கையாக மாறியதால் மகனை கொன்ற தாய் - 5 பேரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
ஹார்மோன் ஊசி போட்டு ஆணாகவே மாற்றும் ஏற்பாட்டை தாய் செய்து வந்ததாகவும் அதற்கு நவீன் குமார் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் விசாரணையில் தகவல்
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் உமா தேவி (45) சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார் (19). நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டார். முன்னதாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நவீன் குமார் காணவில்லை என்று தாய் உமா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் மீது விசாரணை நடத்திய காவல்துறையினர் பெங்களூரில் நவீன் குமார் திருநங்கையாக மாறுவதற்கு சிகிச்சை செய்து கொண்டு வந்தது தெரியவந்தது. அதன்பின் நவீன் குமார் காவல்துறையினர் தாயிடம் ஒப்படைத்துள்ளனர். நவீன் குமார் திருநங்கையாக வாழ்வதை விரும்புவதால் தாயிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார். இதனிடையே 15 நாட்களுக்கு முன்பு நவீன் குமார் மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் கடந்தவாரம் நவீன் குமாரை காயங்களுடன் மீட்ட உமா தேவி அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன் குமார் என்ற அக்ஷிதா உயிரிழந்தார்.
இந்நிலையில் சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தேக மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாய் உமா தேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் உமா தேவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டு ஆணாகவே மாற்றும் ஏற்பாட்டை செய்து வந்ததாகவும் அதற்கு நவீன் குமார் ஒப்புக் கொள்ளாததால், தனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு அவனை அடித்து, வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றதாகவும், அப்போது அவரை பலமாக தாக்கி வாயை பொத்தியதால் மூச்சுத்திணறி நவீன் குமார் இறந்துவிட்டதாக கருதி, பயத்தில் வீட்டின் அருகில் உள்ள முள் புதரில் அவரை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நவீன் குமார் உயிரிழந்ததால் தாய் உமாதேவியை கைது செய்த போலீசார், நவீன்குமார் மீது தாக்குதல் நடத்திய வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் உள்பட ஆறு பேரையும் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதில் உமா தேவியை சேலம் பெண்கள் கிளை சிறையில் மற்ற வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரையும் ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மகன் திருநங்கையாக மாறியதால் அவமானம் தாங்க முடியாத தாய், தெரிந்த நபர்களை வைத்து மகனையே அடித்துக் கொன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.