`முந்தைய பாலியல் உறவுகளை வைத்து வன்கொடுமையை நியாயப்படுத்த முடியாது!’ - பஞ்சாப் உயர்நீதிமன்றம்!
பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் குற்றவாளியின் ஜாமீனை மறுத்து உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் குற்றவாளியின் ஜாமீனை மறுத்து உத்தரவிட்டுள்ளது. குற்றவாளியும், பாதிக்கப்பட்டவரும் சம்மதத்துடன் உறவுகொண்டதாக ஜாமீன் கோரப்பட்ட நிலையில், `இரு நபர்களுக்கும் ஏற்கனவே வெவ்வேறு காரணங்களுக்காக இருவர் சம்மதத்துடனும் பாலியல் உறவு கொண்டிருந்தாலும், முந்தைய பாலியல் உறவுகளின் காரணமாக பின்னால் நிகழ்ந்துள்ள வன்கொடுமையைக் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது’ என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கின் குற்றவாளியின் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் முதலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடுத்துள்ள பாதிக்கப்பட்டவர் விவாகரத்து பெற்ற 35 வயதான பெண் எனக் கூறப்படுகிறது. தோல்வியைடைந்த காதலைப் பயன்படுத்தி பணம் பெறும் முயற்சி எனக் குற்றவாளியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளியின் தரப்பில் தானும், பாதிக்கப்பட்ட பெண்ணும் வயது வந்தவர்கள் எனவும், இருவரும் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் இடையிலான உறவு இருவர் சம்மதத்துடன் இருந்ததாகவும் புகைப்படங்களுடன் சமர்பித்துள்ளார்.
அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், குற்றவாளியின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு இருப்பதாகவும், அவர் வெறும் 2 மாதங்கள், 9 நாள்கள் மட்டுமே சிறையில் இருந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் இன்னும் பெறப்படாததால், இருவரும் சம்மதத்துடன் உறவில் இருந்தார்கள் என்று முடிவு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் பூரி தலைமையிலான அமர்வு, முதல் தகவல் அறிக்கை 48 நாள்கள் தாமதாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அரசுத் தரப்பு கூறுவதை மறுக்க முடியாது எனக் கூறியுள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதற்குப் பாதிக்கப்பட்டவரின் அச்சம், மன அழுத்தம், குற்றவாளி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது முதலானவை காரணங்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கைப் போலியானது எனக் கூறி தள்ளுபடி செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றவாளியின் தரப்பில் லிவ்-இன் உறவு இருந்ததாகக் கூறப்பட்டதைப் பற்றி பேசும்போது, நீதிபதி விவேக் பூரி, `சட்டப்படி லிவ்-இன் உறவில் வாழ்வதற்குத் தடையில்லை. எனினும், சட்டம் ஒரு பெண் தான் விரும்பும் நபருடன் பாலியல் உறவில் இருப்பதற்கான உரிமையையும் வழங்குகிறது. வன்கொடுமை என்பது ஒரு பெண்ணின் விருப்பத்தை மீறி நிகழ்த்தப்படும் பாலியல் செயல். இருவருக்கும் கடந்த காலத்தில் பாலியல் உறவு இருந்தாலும், அதை எதிர்காலத்தில் வன்கொடுமை நிகழ்ந்தால் கடந்த காலத்தை வைத்து மதிப்பிட முடியாது. ஒரு பெண் தனது விருப்பமின்மையைத் தெரிவித்தவுடன், அதற்கு முன்னால் அவர் கொடுத்த சம்மதம் இயல்பாகவே செல்லாமல் போகிறது. எனவே அதன்பிறகு நிகழும் வற்புறுத்தப்பட்ட பாலியல் உறவு என்பது குற்றவியல் சட்டப்பிரிவி 376-ன் கீழ் பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும்’ என்று கூறியுள்ளார்.
குற்றத்தின் அளவைப் பார்க்கும் போது, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க முடியாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.