குடிக்க பணம் இல்லை.... 4 சவரன் தங்க செயினை வாயில் போட்டு விழுங்கிய வட மாநில வாலிபர்
புதுச்சேரி: குடிக்க பணம் இல்லாததால் 4 சவரன் தங்க செயினை தனது வாயில் போட்டு விழுங்கிய வட மாநில வாலிபர் கைது.
புதுச்சேரி: குடிக்க பணம் இல்லாததால் 4 சவரன் தங்க செயினை தனது வாயில் போட்டு விழுங்கிய வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் நெல்லுமண்டி அருகே நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி இரவு இவரது கடைக்கு 25 வயது வட மாநில இளைஞர் தங்க செயினை வாங்க வந்திருப்பதாகக் கூறியுள்ளார். ஊழியர்கள் வித விதமான தங்க நகைகளை எடுத்துக் காண்பித்துள்ளனர். ஒவ்வொன்றாக எடுத்து அவர் கழுத்தில் அணிந்து பார்த்தார். ஒவ்வொன்றாக பிடிக்கவில்லை எனக் கூறி வந்தவர், ஒரு கட்டத்தில் திடீரென 4 சவரன் தங்க செயினை தனது வாயில் போட்டு விழுங்கினார்.
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இளைஞரை பிடித்து தலைகீழாக குலுக்கியும் செயின் வெளியே வரவில்லை. வேறு வழியில்லாமல் அவரை பெரிய கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்தி விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த ராஜசேகர் சவுத் என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் சுற்றுலா வந்த போது பணம் முழுவதும் செலவாகியுள்ளது. மது குடிக்க பணம் இல்லாததால் நகைக்கடைக்குள் புகுந்து நூதன முறையில் நகையைத் திருடி சிக்கிக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் 3 நாள் கழித்து எனிமா கொடுத்து நகையை மீட்டனர். சிகிச்சை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பெரிய கடை போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் நகை திருட முயன்ற சம்பவம் புதுச்சேரி நகைக்கடை வியாபாரிகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்