புதுச்சேரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - 4 வாலிபர்கள் கைது
புதுச்சேரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்ற செய்த 4 வாலிபர்கள் கைது
புதுச்சேரி லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 4 பேரை கைது செய்து மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையில் கல்லூரி, சமுதாய கல்லூரி, பள்ளிகள் என கல்வி நிலையங்கள் உள்ளன. இந்த பகுதியில் கஞ்சா விற்பனை சூடுபிடித்துள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடியாக போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். தாகூர் கலைக்கல்லூரி மைதானம் அருகே லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் மேலும் சந்தேகமடைந்து சோதனை போட்டதில் சிறுசிறு அளவில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
'ஆவணங்களை காணோமா? ஷாக்கான நீதிபதி' - பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை வழக்கில் திடீர் திருப்பம்!
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் உருளையன்பேட்டை தென்னஞ்சாலை ரோட்டை சேர்ந்த மணியழகன் (வயது 19), கொசப்பாளையத்தை சேர்ந்த சேரன் (21), கிருஷ்ணாநகரை சேர்ந்த லோகேஷ் (21) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக சப்ளை செய்வது சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் (22) என்பது அம்பலமானது, ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சப்ளை செய்த கஞ்சாவுக்கான பணத்தை வாங்கிச் செல்வதற்காக லாஸ்பேட்டை தாகூர் கல்லூரி அருகே நேற்று இரவு சாந்தகுமார் வந்து இருந்தார். அவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணியழகன், சேரன், லோகேஷ் மற்றும் சாந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், ரூ.11,500 ரொக்கம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இவர்கள் 4 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மணியழகன், சேரன் இருவரும் புதுச்சேரியில் மெக்கானிக் ஆகவும், லோகேஷ் டெய்லராகவும் வேலைபார்த்து வந்த நிலையில் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்ற போது போலீசில் சிக்கி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்