விற்பனைக்காக வைத்திருந்த 21 கிலோ கஞ்சா... வாலிபரை வளைத்து பிடித்த தஞ்சை போலீசார்
தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தஞ்சையில் விற்பனைக்காக 21 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கஞ்சா, புகையிலை, மது விற்பனை ஆகிய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை அடிக்கடி போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
மேலும், குற்றச்செயல்களை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வடக்கு வாசல் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகம்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை வடக்குவாசல் ஏ.வி.பதி நகரை சேர்ந்த ரமேஷ் மகன் சசிக்குமார் (28) என்பதும், விற்பனைக்காக 21 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்றில் தவறி விழுந்து பழ வியாபாரி பலி:
தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்த பாபு (46). இவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவர் எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள புது ஆற்றின் படித்துறையில் நின்று துணி துவைத்துள்ளார். பின்னர் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரின் வேகத்தில் பாபு இழுத்து செல்லப்பட்டார். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பாபுவை தேடினர்.
இந்நிலையில் தஞ்சை இருபது கண் பாலம் அருகே பாபுவின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து பொதுமக்கள் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டுள்ளனர்.